search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை-புறநகரில் அதிகாலை பலத்த மழை
    X

    சென்னை-புறநகரில் அதிகாலை பலத்த மழை

    • தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட் களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கோடை காலம் ஆரம்பத்திலேயே மழை பெய்து வெப்பம் தணிந்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தது.

    இந்த நிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் நிலவுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட் களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை பலத்த மழை கொட்டியது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. நேற்றும் சில இடங்களில் பரவலாக மழை பெய்து இருந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3-வது நாளாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் கனமழை கொட்டித்தீர்த்தது.

    எழும்பூர், புரசைவாக்கம், வடபழனி, அயனாவரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், செங்குன்றம், பூந்தமல்லி, மாதவரம், கோயம்பேடு, போரூர், தாம்பரம், பல்லாவரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், புழல், பெரம்பூர் உள்ளிட்ட அனைத்து இடங்கலும் நல்ல மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    3-வது நாளாக தொடர்ந்து பெய்துவரும் மழையால் பகல் நேரங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கோடை காலம் ஆரம்பத்திலேயே மழை பெய்து வெப்பம் தணிந்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    ஏப்ரல், மே மாதங்களிலும் கோடை மழை நீடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

    கொளத்தூர் பகுதியில் அதிகாலை நல்ல மழை பெய்து இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக கொளத்தூர், குமரன் நகர் 3வது தெருவில் உள்ள மரம் ஒன்று திடீரென சரிந்து அருகில் நிறுத்தப்பட்டு இருந்த வக்கீலான கோகுல கிருஷ்ணன் என்பவரது கார் மீது விழுந்தது.

    மரத்தை ஒட்டி மழை நீர் வடிகால் பணி மேற் கொண்டதால் மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு மரம் சரிந்ததாக தெரிகிறது. மரத்தினை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது. கும்மிடிப் பூண்டியில் அதிகபட்சமாக 37 மி.மீட்டர் மழை பதிவா னது. ஆவடி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட பகுதியிலும் சுமார் ஒரு மணிநேரம் மழை வெளுத்து வாங்கியது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு:- கும்மிடிப்பூண்டி - 37

    ஆர்.கே பேட்டை- 17, ஜமீன் கொரட்டூர்- 13, திருவள்ளூர்-6, ஊத்துக்கோட்டை- 3 மி.மீட்டர், சென்னை புறநகர் பகுதியில் பெய்த மழை காரணமாக செம்பரம் பாக்கம் ஏரிக்கு இன்று காலை நீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏரிக்கு 562 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து ஏற்கனவே செம்பரம் பாக்கம் ஏரிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இந்த நீருடன் மழை நீரும் சேர்ந்து தற்போது வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில்2116 மி.கன அடி தண்ணீர் உள்ளது. குடிநீருக்காக 108 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டி உள்ளது. அதிகாலை காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

    இதனால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து குளிர்ச்சியான சூழலால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் மழை பெய்து உள்ளது.

    Next Story
    ×