search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
    X

    சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

    • 2022-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.10.2022 ஆகும்.
    • தகுதியுடைய நபர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுபெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருதுதொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்-அமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில், 2022-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் "சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூகநீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் போன்ற தகுதிகள் உடையவர்கள் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

    தங்களது விண்ணப்பம் தங்களின் பெயர், பிறந்த இடம் மற்றும் நாள், தாய்- தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி (தொலைபேசி எண்ணுடன்), கல்விதகுதி, இனம் மற்றும் ஜாதி, தொழில், சமூகநீதிக்காக பாடுபட்ட விவரம், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூகசீர்திருத்தக் கொள்கை குறித்து சிறு குறிப்பு கலை இலக்கியம் சமூகபணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    2022-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.10.2022 ஆகும். மேற்படி தகுதியுடைய நபர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×