search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி பகுதியில் சோதனை சாவடிகளில் இன்று முதல் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
    X

    பொள்ளாச்சி பகுதியில் சோதனை சாவடிகளில் இன்று முதல் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

    • கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அதிகளவு கல்குவாரிகள் உள்ளன.
    • விவசாய அமைப்புகள், பல்வேறு எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அதிகளவு கல்குவாரிகள் உள்ளன.

    இந்த கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி முறைகேடாக கனிம வளத்தை கொள்ளையடித்து, கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கு விவசாய அமைப்புகள், பல்வேறு எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கனிம வள கொள்ளையை தடுக்க கோரி கடந்த 26-ந் தேதி பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டு கனிம வள கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.கவினர் சோதனை சாவடிகளில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

    இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, கனிமவள கொள்ளையை தடுக்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் இன்று முதல் கேரள மாநில எல்லைகளையொட்டிய சோதனை சாவடிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொள்ளாச்சி நடுபுணி, கோபாலபுரம், சொக்கனூர், வீரப்ப கவுண்டனூர், மீனாட்சிபுரம் செம்மணாம்பதி சோதனை சாவடிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக லாரிகளில் அதிரடி சோதனை மேற்கொள்கின்றனர். கனிம வளங்கள் கடத்தப்படுவது தெரிந்தால் உடனடியாக பிடித்து நடடிக்கையும் எடுத்து வருகிறார்கள்.

    மாவட்ட நிர்வாகம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் மற்றும் சப்-கலெக்டர் அறிவுறுத்தலின் படி கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில எல்லைகளையொட்டிய சோதனை சாவடிகளில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

    பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள நடுபுணி மற்றும் கோபாலபுரம் பகுதியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை என 2 ஷிப்டுகளாக குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் கிணத்துக்கடவு தாலுகா சொக்கனூர், வீரப்ப கவுண்டனூர் சோதனை சாவடிகளில் காலை8 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை 3 ஷிப்டுகளாகவும், ஆனைமலை தாலுகாவில் மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை என 3 ஷிப்டுகளாகவும் இந்த சோதனையானது நடக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×