search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • ஒரு ஆடு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையில் தரத்திற்கேற்ப விற்பனையானது.
    • இந்த ஆண்டு ஏராளமான பெண்களும் ஆடுகளை வாங்குவதற்கு பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தைக்கு அதிகம் வந்திருந்தனர்.

    தென்காசி:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் ஆட்டுச்சந்தைகளுக்கு ஆடுகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டு கோடிக்கணக்கில் வருவாயும் கிடைத்து வருகிறது.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் அரசு ஆட்டுச் சந்தையில் இன்று காலை முதலே பொதுமக்களும், குவியத் தொடங்கினர்.

    பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், கடையம், கல்லூரணி, ராமச்சந்திர பட்டணம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    ஒரு ஆடு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையில் தரத்திற்கேற்ப விற்பனையானது. ஆடுகளை வாங்குவதற்காக கடையநல்லூர், மேலப்பாளையம், தென்காசி, கடையம், ரவண சமுத்திரம், பொட்டல்புதூர், வீராணம், புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

    எப்பொழுதும் ஆடுகளை வாங்குவதற்கு ஆண்களே அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த ஆண்டு ஏராளமான பெண்களும் ஆடுகளை வாங்குவதற்கு பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தைக்கு அதிகம் வந்திருந்தனர்.

    இன்று ஒரு நாள் மட்டும் பாவூர்சத்திரம் அரசு ஆட்டுச் சந்தையில் ஒரு கோடி வரையில் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×