என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே வாழை, மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி பாகுபலி யானை அட்டகாசம்
- பாகுபலி காட்டு யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- பாகுபலி யானை மனிதர்கள் எவரையும் தாக்கியதில்லை என்றாலும், மனித-வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜக்கனாரி வனப்பகுதியில் பாகுபலி யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை தொடர்ந்து ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது.
அதிகாலை நேரங்களில் மேட்டுப்பாளையம் அடர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி யானை பகல் நேரங்களில் குரும்பனூர், சமயபுரம், கிட்டம்பாளையம், தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பின்னர், மாலை அல்லது இரவு நேரங்களில் சமயபுரம் பகுதி வழியாக மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.
வனத்துறையினரும் தொடர்ந்து அந்த யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையிலும் தொடர்ந்து பாகுபலி காட்டு யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை இந்த பாகுபலி யானை மனிதர்கள் எவரையும் தாக்கியதில்லை என்றாலும், மனித-வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாகுபலி யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த வண்ணமாகவே உள்ளனர்.






