என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவிலில் வழிபாடு செய்வதில் பிரச்சினை- சாலை மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உள்பட 150 பேர் கைது
- பாலவநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது.
- பாலவநத்தம்-அருப்புக்கோட்டை சாலையில் திரண்ட ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உரிமை கொண்டாடுவது தொடர்பாக 2 சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சில ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது.
இந்தநிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு களரி திருவிழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அருப்புக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் கல்யாண்குமார் தலைமையில் நேற்று இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது மாசி களரி விழாவை கொண்டாட அரசு தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் தங்கள் ஊர் மக்களிடம் பேசி முடிவை தெரிவிப்பதாக கூறிவிட்டுச் சென்றனர்.
நேற்று இரவு பாலவ நத்தம்-அருப்புக்கோட்டை சாலையில் திரண்ட ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. காருன்காரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் இன்று காலை நேற்று இரவு மறியல் செய்தவர்கள் மீண்டும் பாலவநத்தம் பஸ் நிறுத்தத்தில் திரண்டனர். பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர். ஆனாலும் தொடர்ந்து அங்கு அதிகளவில் கூட்டம் கூடியது. இதையடுத்து அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அல்லம்பட்டி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கையால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






