search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் 8-வது குற்றவாளி சிக்கினார்
    X

    அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் 8-வது குற்றவாளி சிக்கினார்

    • தனது பள்ளி தோழர்கள் மற்றும் ஜிம் நண்பர்களை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு முருகன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.
    • முருகன், அவரது கூட்டாளிகளான சந்தோஷ், பாலாஜி, செந்தில், சூர்யா ஆகிய 5 பேர் பிடிபட்டனர்.

    சென்னை:

    சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் கடந்த 13-ந்தேதி 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெடரல் வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் மேலாளராக பணியாற்றி வந்த கொரட்டூரை சேர்ந்த முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.

    தனது பள்ளி தோழர்கள் மற்றும் ஜிம் நண்பர்களை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு முருகன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து முருகன், அவரது கூட்டாளிகளான சந்தோஷ், பாலாஜி, செந்தில், சூர்யா ஆகிய 5 பேர் பிடிபட்டனர்.

    இவர்கள் வெவ்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 32 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3½ கிலோ தங்க நகைகளை கொள்ளையர்களில் ஒருவரான சந்தோஷிடம் இருந்து வாங்கி பதுக்கிய குற்றத்துக்காக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டார்.

    தங்க நகைகளை உருக்குவதற்கு உதவி செய்த நகை கடை அதிபர் ஸ்ரீவத்சவ் என்பவர் கைதானார். இவர்களுடன் சேர்ந்து தங்க நகை கொள்ளையில் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாக கபிரியேல் என்பவர் சிக்கியுள்ளார். கொள்ளை கும்பல் தலைவனான முருகனின் பள்ளி தோழனான இவரும் வங்கி கொள்ளை சம்பவத்துக்கு உதவிகளை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    வங்கி கொள்ளைக்கு கபிரியேல் வெளியில் இருந்தபடியே பல்வேறு வழிகளில் திட்டம் போட்டு கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, வங்கி கொள்ளையில் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள், கொள்ளை கும்பலுக்கு உதவியவர்கள் என இதுவரை 7 பேர் கைதாகி இருக்கிறார்கள். இந்த குற்ற பின்னணி தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த திட்டமிட்டு விசாரணை தொடர்கிறது.

    இதன் அடிப்படையில் கொள்ளை கும்பலின் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த அடிப்படையில் தான் கபிரியேலிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×