என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.எல்.சி. அதிகாரியின் தந்தை அடித்துக்கொலை- குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
    X

    என்.எல்.சி. அதிகாரியின் தந்தை அடித்துக்கொலை- குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

    • விவசாய நிலத்தில் கோவிந்தசாமி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
    • கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வி.கைகாட்டி அருகேயுள்ள தேளுர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி நாட்டார் (வயது 85). இவர் ஊர் நாட்டாண்மையாகவும் இருந்து வந்தார். இவரது மகன் முருகேசன், நெய்வேலி அனல்மின் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    முருகேசனின் மகன் எழில் நிலவன் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள் திருச்சியில் வசித்து வருகிறார்கள்.

    கோவிந்தசாமி மட்டும் தேளூர் கிராமத்தில் உள்ளார். தினமும் காலையிலேயே வீட்டை விட்டு வெளியில் செல்லும் அவர் மாலையில் திரும்பி வருவது வழக்கம். இந்தநிலையில் விளங்குடியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலங்களை பார்ப்பதற்காக நேற்று காலை கோவிந்தசாமி சென்றுள்ளார். மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவரது உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் கோவிந்தசாமி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவர் கையில் அணிந்திருந்த தங்க மோதிரங்களை காணவில்லை.

    இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. உடனடியாக அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விளாங்குடி பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கோவிந்தசாமிைய கொலை செய்த மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பாரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் தொடர்பாக கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×