என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரக்கோணத்தில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பால் 9-ம் வகுப்பு மாணவன் பலி
- மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
- 3 நாட்களுக்கு டெங்கு கொசுக்களை ஒழிக்க மருந்துக்கள் தெளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி 19-வது வார்டு ஜோதி நகர் பாலசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது40). இவரது மனைவி தேவி (35). தம்பதியின் மகன் ஹரிஹரன் (14). அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 13-ந்தேதி சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் சிறுவனை அருகில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 23-ந்தேதி சிறுவனுக்கு கடுமையான வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் சிறுவனை சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தபோதும், உடல்நிலை மோசமானது. உடனடியாக 24-ந் தேதி சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனை தொடர்ந்து, ராணிப்பேட்டை சுகாதாரத்துறை சார்பில் இன்று முதல் அப்பகுதியில் தூய்மை மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், 3 நாட்களுக்கு டெங்கு கொசுக்களை ஒழிக்க மருந்துக்கள் தெளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






