search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மூர் பேரூராட்சிமன்ற தலைவராக சுயேட்சை வேட்பாளர் தேர்வு- அதிகாரியை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
    X

    அம்மூரில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    அம்மூர் பேரூராட்சிமன்ற தலைவராக சுயேட்சை வேட்பாளர் தேர்வு- அதிகாரியை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

    • அ.தி.மு.க.வை சேர்ந்த வரலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
    • வாக்குப்பதிவு நடந்தது. இரு தரப்பினரும் 7 வாக்குகள் பெற்று சரிசமமாக இருந்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. 8, அ.தி.மு.க. 4, பா.ம.க. 2, சுயேட்சை 1 கவுன்சிலர்கள் இருந்தனர்.

    பேரூராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏகே சுந்தரமூர்த்தி இருந்தார். இவர் உடல்நிலை குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார்.

    இதையடுத்து தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் இன்று பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த வரலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நடந்தது. இரு தரப்பினரும் 7 வாக்குகள் பெற்று சரிசமமாக இருந்தனர்.

    இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரான சரவணன், வரலட்சுமி பெற்றுள்ள 7 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாது என அறிவித்து சுயேட்சை வேட்பாளர் சங்கீதா வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

    இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் வாலாஜா சோளிங்கர் ரோட்டில் அம்மூர் பஸ் நிறுத்தம் நெடுஞ்சாலையில் தி.மு.க. அரசை கண்டித்தும், தேர்தல் அதிகாரியை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அங்கிருந்து கோஷங்களை எழுப்பி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க.வினர் திடீரென ஆத்திரமடைந்து தேர்தல் நடத்தும் அலுவலரான சரவணனை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அம்மூர் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×