search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு
    X

    பிரதமர் திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு

    • திண்டுக்கல் வரும் பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க. சார்பிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவளவிழா வருகிற 11-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

    இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி ஓய்வெடுப்பதற்காக பல்கலைக்கழக விருந்தினர் இல்லமும், முதல்-அமைச்சருக்காக துணைவேந்தர் இல்லமும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

    பிரதமர் வருகையை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல்கலைக்கழகம் அருகே நான்குவழிச்சாலையில் உள்ள அணுகு சாலைகளில் வேகத்தடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

    பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பதிவாளர் சிவக்குமார் தலைமையிலான அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டமளிப்பு விழா நடைபெறும் விழாமேடை மற்றும் பல்கலைக்கழக வளாகப்பகுதிகளை கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், மதுரை மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க், திண்டுக்கல் டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விசாகன் தலைமையில் பிரதமர் வருகையை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் திண்டுக்கல் வரும் பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க. சார்பிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர். பின்னர் ராமசீனிவாசன் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருவது இதுவே முதல் முறை.

    எனவே மதுரை விமான நிலையத்தில் இருந்து பிரதமரை வரவேற்க பா.ஜ.க. நிர்வாகிகள் ஆர்வமாக உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. பிரதமர் வருகையை திண்டுக்கல் மக்கள் மட்டுமின்றி தமிழகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றார்.

    Next Story
    ×