search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு- விவசாயிகளின் 7 நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது
    X

    அமைச்சருடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு- விவசாயிகளின் 7 நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது

    • 7-வது நாளாக ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடாசலம், ரவி தலைமையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
    • எங்கள் கோரிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த போராட்டம் தீவிரமடையும்

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் மற்றும் கரை அமைக்கும் பணியை ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்த்தும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி பழைய கட்டுமானங்கள், பழுதடைந்த பகுதிகளை மட்டும் சீரமைக்க 2 தரப்பு விவசாயிகளும் ஒப்பு கொண்டனர்.

    ஆனால் சில இடங்களில் கான்கிரீட் தளம், கரை அமைக்கும் பணி நடந்ததால் திட்ட எதிர்ப்பு விவசாயிகள் ஈரோடு அடுத்த வாய்க்கால் மேட்டில் கடந்த 6 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று 7-வது நாளாக ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடாசலம், ரவி தலைமையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு, கருப்பு கொடியேற்றம், கோபி பகுதியில் இருந்து வாகனங்களில் பேரணி நடத்தினர். வணிகர்கள் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அமைச்சர் முத்துசாமி நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள் சில கோரிக்கைகள் வைத்தனர். உங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் தெரிவிக்கப்படும் என்று கூறினார். இதனை ஏற்று விவசாயிகள் தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் 7 நாட்களாக நடந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.

    இது குறித்து கீழ்பவானி விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது:-

    கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு தொடர்பான அரசாணையில் மாற்றம் செய்து, பழைய கட்டுமானங்களை சீரமைக்க கோரியும், மண் கால்வாய்களை மண்ணைக்கொண்டே சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி 7 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு தரப்பில் அமைச்சர் முத்துசாமி எங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவுவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

    அதன் அடிப்படையில் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த போராட்டம் தீவிரமடையும். எங்களை பொறுத்தவரை கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானங்களை செய்ய சொல்லியுள்ளோம். புதிய கட்டுமானங்களை அந்த பகுதி விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு செயல்படுத்த வேண்டும். புதிதாக தேவையற்ற இடங்களில் கட்டுமானங்களை செயல்படுத்தக்கூடாது.

    எதிர்கட்சித்தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது பொதுமக்கள், விவசாயிகள் கருத்தை கேட்டு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 95 சதவீத விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்ப்பதால், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து எங்களது நியாயமான கோரிக்கைக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×