என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி
- மோனிஷ் தண்ணீரில் மூழ்கியது பற்றி எதுவும் தெரியாதது போல் நண்பர்கள் இருந்துவிட்டனர்.
- இரவு நீண்ட நேரம் ஆகியும் மோனிஷ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் உடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வாயலூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோனிஷ் (வயது10). மெரட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றுமாலை மாணவன் மோனிஷ், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேருடன் சைக்கிளில் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.
அப்போது குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற மோனிஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்து நண்பர்கள் கவனிக்கவில்லை. இதனால் மோனிஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே குளித்து விட்டு கரைக்கு திரும்பியதும் நண்பர்கள் உடன் வந்த மோனிசை தேடினர். அவர் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மோனிசின் சைக்கிள் மற்றும் ஆடைகளை குளத்தில் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மோனிஷ் தண்ணீரில் மூழ்கியது பற்றி எதுவும் தெரியாதது போல் இருந்துவிட்டனர்.
இரவு நீண்ட நேரம் ஆகியும் மோனிஷ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் உடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான் மோனிஷ் குளத்தில் மூழ்கியது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடினர். இரவு 11 மணியளவில் மோனிஷின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






