search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே கத்தி முனையில் 2 வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
    X

    கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

    பழனி அருகே கத்தி முனையில் 2 வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

    • ஒட்டன்சத்திரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் டாக்டர் தம்பதியை கட்டிபோட்டு 110 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டில் இருந்த கார் ஆகியவற்றை முகமூடிகும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
    • கொள்ளையில் இதுவரை யாரும் சிக்கவில்லை. கொள்ளையர்கள் தப்பிச்சென்ற கார் கொடைரோடு அருகே மீட்கப்பட்டதால் அவர்கள் ரெயிலில் தப்பிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள ஆர்.ஜி.நகரை சேர்ந்தவர் கோபி(45). இவர் வயலூரில் லாரி புக்கிங் ஆபிஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சர்மிளா(38). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்றிரவு கோபி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் இவரது வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் திடீரென குழந்தைகள் இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டனர். பின்னர் ஒருவர் சர்மிளாவின் கழுத்தில் கத்தியை வைத்தபடி வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை தருமாறு மிரட்டினர்.

    இதனைதொடர்ந்து சர்மிளா வீட்டில் இருந்த 27 பவுன் நகையை கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து அங்கிருந்த செல்போன்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு கொள்ளையர்கள் தப்பினர்.

    அதன்பிறகு அருகில் உள்ள கருணாகரன் என்பவரது வீட்டிற்குள்ளும் புகுந்தனர். இதேபாணியில் கத்தி முனையில் வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்து தருமாறு அந்த கும்பல் மிரட்டியது.

    கருணாகரன் மனைவியிடம் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு அருகில் இருந்த செந்தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டிற்குள் நுழைய முயன்றனர். ஆனால் அதற்குள் நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகரித்ததால் கிடைத்தவரையில் லாபம் என நினைத்து நகை பணத்துடன் தப்பி ஓடினர்.

    இதுகுறித்து பழனி தாலுகா போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி தலைமையில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளில் கைரேகை நிபுணர்கள் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்தடுத்த வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் டாக்டர் தம்பதியை கட்டிபோட்டு 110 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டில் இருந்த கார் ஆகியவற்றை முகமூடிகும்பல் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையில் இதுவரை யாரும் சிக்கவில்லை. கொள்ளையர்கள் தப்பிச்சென்ற கார் கொடைரோடு அருகே மீட்கப்பட்டதால் அவர்கள் ரெயிலில் தப்பிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வடமாநிலத்தவராக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

    தற்போது அதேபாணியில் பழனி புறநகர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×