search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடையை உடைத்து அரிசி, பருப்பை ருசித்த யானைகள்
    X

    ரேஷன் கடையை உடைத்து அரிசி, பருப்பை ருசித்த யானைகள்

    • பூவன் ரக வாழை மரங்களை மிதித்து நாசமாக்கியது.
    • ரேஷன் பொருட்களை காலால் உதைத்தும் சேதப்படுத்தியது.

    பேரூர்:

    பேரூர் அருகே தீத்திபாளையம், பச்சாபாளையம், குப்பனூர், கரடிமடை ஆகிய மலையடிவார கிராமங்கள் உள்ளன.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியிலிருந்து, காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது.

    இன்று அதிகாலை, வனத்திலிருந்து வெளியேறிய, காட்டு யானைகள் குருநாதன் என்பவர் 4 ஏக்கரில் பயிர் செய்திருந்த வாழைத் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு பயிரிட்டு இருந்த 300-க்கும் மேற்பட்ட பூவன் ரக வாழை மரங்களை மிதித்து நாசமாக்கியது.

    இதேபோல் இன்று அதிகாலை தீத்திபாளையம் ரேஷன் கடைக்கு சென்று, அங்கிருந்த ஷட்டரை உடைத்து உள்ளிருந்த அரிசி, பருப்பு, கோதுமை மூட்டைகளை வெளியே எடுத்து போட்டு ருசி பார்த்தது. தொடர்ந்து ரேஷன் பொருட்களை காலால் உதைத்தும் சேதப்படுத்தியது.

    மேலும் பெருமாள்சாமி தோட்டத்தின் வழியே ரேஷன் கடைக்கு வரும் போது, தோட்டத்தில் இருந்த தக்காளி பயிர்களை மிதித்து சேதப்படுத்தியதோடு கேட்வால்வு பைப் குழாய்களை மிதித்து சேதமாக்கியது.

    இதுகுறித்து, மாவட்ட விவசாய சங்க துணை தலைவர் கொங்கு பெரியசாமி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் மதுக்கரை வனச்சரக அலுவலர் சந்தியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

    கடந்த ஒரு வாரமாக, பச்சாபாளையம், தீத்திபாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால், இப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே, இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், வனத்துறையினர் ரோந்து சுற்றிவர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×