என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் 107 டிகிரி வெயில் பதிவு
- தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் வேலூர், சேலம் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக வெயிலின் தாக்கம் இருக்கும்.
- இந்த ஆண்டு மாறாக ஆரம்பத்தில் இருந்தே ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் அளவு புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது.
தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 4 வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதேபோல் வீடுகளில் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர். வெயில் தாக்கம், அனல் காற்று போன்றவற்றால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை எப்போதும் வேலூர், சேலம் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக வெயிலின் தாக்கம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மாறாக ஆரம்பத்தில் இருந்தே ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 103.01 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று புதிய உச்சமாக மாலை 3 மணி முதல் 4 மணி வரை சத்தியமங்கலம், பவானிசாகர், ஈரோட்டில் ஒரு மணி நேரத்தில் 107 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மதிய நேரம் வெளியே செல்லும்போது தீப்பிடிப்பது போல் இருப்பதால் மக்கள் வெளியே நடமாடுவதை குறைத்து விட்டனர். கோவை, சேலம் போன்ற அண்டை மாவட்டங்களில் வெயில் பதிவாகி வந்தாலும் அவ்வப்போதும் மழை பெய்து வருகிறது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் பேரளவுக்கு மட்டுமே இதுவரை மழை பதிவாகியுள்ளது. ஆனால் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக கால நிலை ஆராய்ச்சி தலைவர், பேராசிரியர் ராமநாதனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக தானியங்கி வானிலை ஆய்வு மைய தரவு படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரத்தில் ஈரோட்டில் 107 டிகிரி (பாரன் ஹீட்) வெயில் பதிவாகி உள்ளது. தொடர்ந்து இதே போல் 10 நாட்கள் கண்காணித்தால் தான் வெயில் தாக்கத்துக்கான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கரும்பு பால், இளநீர், மோர், குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர். இதேபோல் தர்பூசணி, வெள்ளரிக்காய் வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதே வெயிலின் தாக்கம் இந்த அளவுக்கு இருக்கும் போது, ஏப்ரல், மற்றும் மே மாதம் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என மக்கள் இப்போதே அச்சப்பட தொடங்கியுள்ளனர்.






