என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் 105.4 டிகிரி வெயில் பதிவு- பொதுமக்கள் கடும் அவதி
- மதிய நேரத்தில் வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
- வீடு, அலுவலகங்களில் மின் விசிறிகள் ஓடினாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக அனல் காற்றே வீசுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கோடைகாலம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் வேலூர், திருச்சி போன்ற இடங்களில் தான் அதிகளவில் வெப்பம் நிலவும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே ஈரோட்டில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. அதுவும் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் 107 டிகிரி வெப்ப நிலை பதிவாகி இருந்தது. அதை தொடர்ந்து தினமும் ஈரோட்டில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மதிய நேரத்தில் வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வீடு, அலுவலகங்களில் மின் விசிறிகள் ஓடினாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக அனல் காற்றே வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தினந்தோறும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவில் குளிர்பானங்கள், கரும்பு பால், மோர், இளநீர், தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி பிஞ்சு, நுங்கு போன்ற குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றும் ஈரோட்டில் கடுமையான வெப்பம் நிலவியது. இதில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் 105.4 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. குறிப்பாக மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பஸ்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட இந்த ஆண்டு வெப்பத்தின் பிடியில் ஈரோடு சிக்கி தவிக்கிறது. அதுவும் அடுத்த மாதம் அக்னி நட்சத்திரம் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.






