search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக்க  முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை
    X

    திட்ட பணிகளுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ்பொய்யாமொழி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

    திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக்க முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை

    • பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நூலக கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், பூதலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள் துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர் ஒன்றியங்களைச் சார்ந்த 214 ஊரக குடியிருப்புகளுக்கு அதில் வசிக்கும்
    2 லட்சத்து 25 ஆயிரத்து 453 மக்கள் பயன்பெறும்வகையில் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் ரூ. 248.67 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, மேல திருப்பந்துருத்தி ஆகிய பேரூராட்சிகளில் நூல் நிலைய புதிய கட்டிட பணிகள், திருக்காட்டுப்பள்ளி மற்றும் திருவையாறு புதிய நவீன பஸ் நிலையங்கள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலதிருப்பந்துருத்தி, நூலக கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இடம் தேர்வு செய்து கொடுத்த உடன் பணிகள் தொடங்கும்.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து கொடுத்தவுடன் பணிகள் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கடந்த 20 மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு குடிநீர் திட்டங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 801 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    கோவை, சேலம், திருநெல்வேலி, சங்கரன்கோ வில், புளியங்குடி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்று அடிக்கல் நாட்டப்படும் குடிநீர் திட்டப்பணிகள் 2024 ஆகஸ்டு மாதத்தில் முடிக்கும் வகையில் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் இருந்து எந்த கோரிக்கை வந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கு எதுவும் தடையாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×