என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் சிட்டுக்குருவிக்கு கூடு அமைக்கும் விழா
- எண்ணற்ற தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதில் நாம் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்
ஊட்டி,
தமிழகத்தில் சிட்டுக்குருவிகள் மனிதனுடன் ஒத்து வாழும் உயிரினமாக உள்ளது. ஆனால் தற்போது அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் சமுக அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை திருகாந்தல் மடத்தில் பேரூராதீனம் சாந்தலிங்க மருத்தாசல அடிகளார் முன்னிலையில் சிட்டுக்குருவிக்கு கூடு அமைக்கும் விழா தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் கோவை சிட்டுக்குருவி ஆர்வலர் பாண்டியராஜன், நித்யானந்தபாரதி உள்பட எண்ணற்ற தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பேசும்போது, மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளுக்கு அதிகம் பங்கு உண்டு. அவை கொசு முட்டை, புழு மற்றும் கொசுக்களை உணவாக உட்கொள்கின்றன.
முந்தைய காலத்தில் தினந்தோறும் காலையில் சேவலுக்கு அடுத்தபடியாக சிட்டுக் குருவிகளே அலாரமாக இருந்து வந்தன. அவற்றின் கீச் கீச் சப்தம் அதிகாலை நேரத்தில் இதமாகவும், புத்துணர்வு தரும் வகையிலும் இருக்கும்.
சிட்டுக்குருவி சுறுசுறுப்புக்கு பெயர்பெற்றது. அவை நம்முடன் வாழும் ஒரு அற்புத படைப்பு. இயற்கை விவசாயம் மூலமாகவே அவற்றின் எண்ணிக்கையை பெருக்க முடியும என்று பறவையியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதில் நாம் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






