என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோனை கருப்பசாமிக்கு படையல் வைக்கப்பட்ட மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.
குச்சனூரில் சோனை கருப்பசாமிக்கு மதுபாட்டில்கள் படையலிட்டு வழிபாடு
- சோனை கருப்புசாமி கோவிலில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சார்பில் 43 ஆடுகள், 26 சேவல்கள் கோவிலில் பலியிடப்பட்டன.
- கோவிலின் ஜன்னல்கள், கதவு உள்ளிட்டவற்றை அடைத்த அவர் கோவில் சுவற்றில் சுவாமிக்கு அருகில் உள்ள பெரிய துவாரம் வழியாக அனைத்து மதுபாட்டில்களையும் உடைத்து ஊற்றினார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திரு க்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 22-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சனீஸ்வர பகவானுக்கும் , நீலாதேவி க்கும் திருக்கல்யாணம் கடந்த 4ந் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சக்திகரகம் எடுத்தல், சந்தனகாப்பு, சாத்துபடி, சுவாமி புறப்பாடு, முளைப்பாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று இரவு இங்குள்ள சோனை கருப்பசாமிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சார்பில் 43 ஆடுகள், 26 சேவல்கள் கோவிலில் பலியிடப்பட்டன. மேலும் ஏராளமானோர் மதுபாட்டில்கள், சுருட்டுகளை சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர்.
அதன்பின் வாயில் துணி கட்டிய பூசாரி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். கோவிலின் ஜன்னல்கள், கதவு உள்ளிட்டவற்றை அடைத்த அவர் கோவில் சுவற்றில் சுவாமிக்கு அருகில் உள்ள பெரிய துவாரம் வழியாக அனைத்து மதுபாட்டில்களையும் உடைத்து ஊற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பலியிட்ட ஆடு, சேவல்களை சமைத்து கறி விருந்து சாப்பிட்டனர்.
இதன்பின்னர் வருகிற 19ந் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி இறக்கத்துடன் ஆடிப்பெரு ந்திருவிழா நிறைவு பெறுகிறது.






