என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழாய்கள் எடுக்கப்பட்டு துண்டிக்கப்பட்ட சாலையை படத்தில் காணலாம்.
போக்குவரத்தை தடை செய்ய சிவபுரம் சாலை துண்டிப்பு - வனத்துறையினர் மீது புகார்
- சிவபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
- கடந்த 2021-ம் ஆண்டு அந்த சாலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
களக்காடு:
களக்காடு தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான பி.சி.ராஜன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் களக்காடு நகராட்சிக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விநாயகர், சாஸ்தா கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களும் உள்ளன.
ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் உள்ளன. மேலும் இந்த கிராமத்தை சுற்றி நீரோடைகளும் ஓடுகின்றன. தலையணை ரோட்டில் இருந்து, சிவபுரம் கிராமத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய களக்காடு பேரூராட்சி நிதி ஒதுக்கீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டது. சிவபுரம் அருகே சாலையின் குறுக்கே செல்லும் ஓடையில் பிளாஸ்டிக் குழாய் மூலம் பாலமும் அமைக்கப்பட்டது.
அதன்பின் கடந்த 2021-ம் ஆண்டு அந்த சாலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் களக்காடு வனத்துறையினர் கடந்த மாதம் சிவபுரத்திற்கு செல்லும் சாலையை தடுப்புகள் வைத்து அடைத்தனர். அத்துடன் சாலையில் போக்குவரத்தை தடை செய்யும் நோக்கில் சாலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
நீரோடையில் அமைக்க ப்பட்ட பாலத்தையும் பெயர்த்து, குழாய்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் சிவபுரத்திற்கு செல்லும் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விளைநிலங்களுக்கு டிராக்டர், லாரிகள் மூலம் இடு பொடுட்களை கொண்டு செல்ல முடியாமலும், விளை பொருட்களை விளைநிலங்களில் இருந்து ஊர்களுக்கு கொண்டு வர முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சேதப்படுத்தி, கிராம மக்களை அவதிக்குள்ளாகி வரும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் களக்காடு நகராட்சிக்குட்பட்ட சிவபுரத்தை மூடி அங்குள்ள மக்களை வெளியேற்றி, விளைநிலங்களையும் கையகப்படுத்தி, விவசாயத்தை அழிக்க வனத்துறையினர் சதி செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதற்காகத்தான் வனத்துறையினர் முதல் கட்டமாக சிவபுரம் சாலையை அடைத்து, பின்னர் போக்குவரத்தை தடை செய்ய, சாலையை துண்டித்துள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






