என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்பத்தூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து 2 பெண்களை கைது செய்தனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருஉடையார்பட்டியை சேர்ந்தவர் பேரின்பம். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது45). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பேரின்பம் வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட சீதாலட்சுமி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    சீதாலட்சுமிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜகண்ணன் மனைவி ரேவதிக்கும் (35) தண்ணீர் பிடிப்பதில் பிரச்சினை இருந்து வந்தது. நேற்றும் இவர்களுக்கிடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ரேவதியும், அவரது மாமியார் வள்ளியும் சீதாலட்சுமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டனர்.

    இந்நிலையில் 2 பேரும் தாக்கியதில் சீதாலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சீதாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் விசாரணை நடத்தி கொலை வழக்காக பதிவு செய்து ரேவதி, வள்ளி ஆகியோரை கைது செய்தார்.

    மானாமதுரை அருகே மாணவியை கொன்ற மாணவியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தற்கொலைக்கு முயன்ற அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    மாணவியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தற்கொலைக்கு முயன்ற அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கணபதியேந்தல் கிராமத்தை சேர்ந்த 11 வயது மாணவி காளீஸ்வரி நேற்று கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை சுவாதி போன்று, இவரும் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.

    இவரை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கொலை செய்ததாக கூறப்படும் லாரி டிரைவர் கார்த்திக், மாணவி காளீஸ்வரிக்கு அண்ணன் முறை ஆவார். இவரும் கழுத்து அறுபட்டு நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு அங்கு கழுத்தில் தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தையல் போடப்பட்டுள்ளதால் கார்த்திக் பேச முடியாத நிலையில் உள்ளார்.

    இந்த நிலையில் அவரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டு இருக்கும் வார்டை சுற்றிலும் காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கார்த்திக்கை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார் அவனிடம் வாக்குமூலம் வாங்குவதில் தீவிரமாக உள்ளனர். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று அவனிடம் எப்படியாவது வாக்குமூலம் வாங்கிவிட வேண்டும் என போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    காளீஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்ய கார்த்திக் முயன்றாரா? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவராமல் போலீசார் தவித்து வருகின்றனர். காளீஸ்வரியின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு அல்லது கார்த்திக் வாக்குமூலம் கிடைத்தால் தான் இந்த வழக்கின் உண்மை நிலை தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர்.
    போலீஸ்காரர் 2-ம் திருமணம் செய்ததை முன்னிட்டு அவர் மீது நடவடிக்கை கேட்டு மனைவி 2 குழந்தைகளுடன் தர்ணா போராட்டம் நடத்தினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் மணிகண்ட சிவா (வயது38), போலீஸ்காரர். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஸ்ரீலேகா (35) என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சிவகங்கை அருகே உள்ள கிராமத்தில் அரசு பள்ளியில் ஸ்ரீலேகா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மணிகண்ட சிவா சென்னைக்கு மாறுதலானார்.

    அங்கு அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் போன்றவற்றில் ஸ்ரீலேகா புகார் கொடுத்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் தனது 2 மகன்களுடன் அகிலாண்டபுரத்தில் உள்ள கணவர் வீட்டு முன்பு ஸ்ரீலேகா தர்ணா போராட்டத்தில் இறங்கினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    தேவகோட்டை அருகே வாகனம் மோதி விவசாயி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள கீழவயல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டு (வயது52). விவசாயியான இவர் நேற்று இரவு கீழவயலில் இருந்து மொபட்டில் தேவ கோட்டைக்கு புறப்பட்டார்.

    சிவகங்கை ரோட்டில் உள்ள கீழவயல் விலக்கு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலி யானார்.

    இது குறித்து தேவ கோட்டை தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வரு கின்றனர்.

    மானாமதுரை அருகே 6-வது வகுப்பு மாணவியை கடத்தி படுகொலை செய்துவிட்டு, லாரி டிரைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மானாமதுரை:

    சென்னையில் பெண் என்ஜினீயர் சுவாதி ரெயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    அவரை கொன்ற கொலையாளி ராம்குமார் போலீசார் பிடிக்க சென்றபோது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம்போல் மானாமதுரையில் நடந்துள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கணபதியேந்தலைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி ஜெயா. கணவர் இறந்துவிட்டதால் மகள் காளீஸ்வரியுடன் (வயது11) வசித்து வந்தார்.

    மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் காளீஸ்வரி 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.

    மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பள்ளிக்கு சென்று ஜெயா விசாரித்தார். அப்போது அவரது வீட்டின் அருகே வசிக்கும் லாரி டிரைவர் கார்த்திக் (25) மோட்டார் சைக்கிளில் காளீஸ்வரியை அழைத்து சென்றதாக தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து ஜெயா, செல்போன் மூலம் கார்த்திக்கை தொடர்பு கொண்டார். அப்போது பேசிய கார்த்திக், மாணவி காளீஸ்வரியை கடத்திச் சென்றுகொன்று புதைத்து விட்டதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா, மீண்டும் கார்த்திக்கை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகி இருந்தது. இது குறித்து மானாமதுரை போலீசில், ஜெயா புகார் செய்தார்.

    மானாமதுரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கண்மாய் கரையில் கழுத்து அறுபட்ட நிலையில், கார்த்திக் உயிருக்கு போராடியபடி கிடக்கும் தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்று கார்த்திக்கை மீட்டனர். அந்த பகுதியில் வி‌ஷ பாட்டிலும் கிடந்தது. இதனால் கார்த்திக் வி‌ஷம் குடித்து இருக்கலாம் என்றும், அதன் பின்னர் கழுத்தை அறுத்து இருக்கலாம் என்றும் கருதிய போலீசார், அவரை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    இதற்கிடையில், அவர் கிடந்த கண்மாய் கரை பகுதியில் போலீசார் இரவு முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் மாணவி காளீஸ்வரி புதைக்கப்பட்ட இடம் தெரியவந்தது. துணை கண்காணிப்பாளர் வனிதா, மானாமதுரை வட்டாட்சியர் சிவக்குமாரி ஆகியோர் முன்னிலையில் காளீஸ்வரி உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவி காளீஸ்வரி கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    அவரை, கார்த்திக் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் அல்லது பலாத்கார முயற்சியில் காளீஸ்வரி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    அவரை கடத்தியதாக கூறப்படும் கார்த்திக் கழுத்து அறுபட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரால் பேசமுடியவில்லை.

    அவர், போலீசாருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு யாரும் அவரது கழுத்தை அறுத்தார்களா? என்று தெரியவில்லை.
    திருப்பாச்சேத்தி அருகே சொத்து பிரச்சனையில் மாமியாரை கழுத்தை நெறித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பாச்சேத்தி:

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராக்கன். இவரது மனைவி பாக்கியம் (வயது65). இவருக்கும் இவரது மருமகள் ரேணுகாதேவிக்கும் சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று திருப்பாச்சேத்தியில் உள்ள படமாத்தூர் செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பாக்கியம் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா, இன்ஸ்பெக்டர் சேசு, பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் பாக்கியத்தின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் பாக்கியத்தின் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் ரேணுகா தேவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தான் உள்பட 3 பேர் சேர்ந்து பாக்கியத்தை கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ரேணுகாதேவியை கைது செய்தனர்.
    காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக அரசு டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வேலாயுதபட்டிணத்தைச் சேர்ந்தவர் அசோகன் (வயது37). இவர் தனது மனைவி கவிதா, மகன்கள் விஷ்வா (7), கேசவா(7) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்.

    திருச்சி–ராமேசுவரம் பை–பாஸ் ரோட்டில் உள்ள செட்டிநாடு அருகே சென்றபோது காரைக்குடியை சேர்ந்த டாக்டர் அரவிந்தன் என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அசோகன், கவிதா மற்றும் 2 குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர். அசோகன், கேசவாவுக்கு கால் முறிவும், கவிதாவுக்கு தலையில் காயமும் ஏற்பட்டது.

    உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 4 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 4 பேரும் சேர்க்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்த புகாரின் பேரில் செட்டிநாடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி அரசு டாக்டர் அரவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்தார்.

    அரவிந்தன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார்.

    மாநில அளவிலான சிலம்ப போட்டியில் 3–ம் இடம் பிடித்து பள்ளி மாணவி சாதனை படைத்தார்.
    திருப்பத்தூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாநில அளவிலான 17 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவிகளுக்கான சிலம்ப போட்டி நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி ஊராட்சியில் உள்ள ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளி மாணவி பொன்னழகு கலந்து கொண்டு மாநில அளவில் 3–ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன், பள்ளி செயலர் குணாளன், பள்ளி முதல்வர் தேன்மொழி, நிர்வாக மேலாளர் சாத்தையா, மேலாளர் ஜோதிராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
    சிவகங்கை அருகே துப்பாக்கி மற்றும் வாளுடன் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் மதுரை ரோடு சோதனை சாவடி அருகே போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கைத்துப்பாக்கி, வாள்கள் இருந்தன.

    இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை கோவனூரை சேர்ந்த ராமு மகன் பூமிநாதன் (வயது24), திருப்பாச்சேத்தி ஆவரங்காடைச் சேர்ந்த சந்திரசேகரன் (27) என்பது தெரியவந்தது

    மேலும் கார் உரிமையாளர் மதுரையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருக்கும், பிடிபட்ட 2 பேருக்கும் சம்பந்தம் உள்ளதா? கார் கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் இந்த காரை சோதனை செய்தபோது மேலும் 2 பேர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடி வருகிறார்கள். கைத்துப்பாக்கி மற்றும் வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ×