search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.

    டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

    • திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தை அடுத்த வெளியாத்தூர் ஊராட்சியில் உள்ள விவசாய நிலையத்தில் புதிய டாஸ்மாக் கடைதிறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக அங்கு புதிய கடை கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.

    தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும். எனவே கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    இந்த நிலையில் டஸ்மாக் கடைஅமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாத்தனூர், வெளியாத்தூர், கண்டரமாணிக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட கிராம மக்கள், விவசாய சங்கத்தினர் திடீரென புதிய டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2-வது நாளாக இன்றும் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிராம மக்களின் போராட்டம் குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பாஸ்கரன், வட்டாட்சியர்கள் கந்தசாமி, வெங்கடேசன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×