search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டம் ஒழுங்கு- சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்
    X

    சட்டம் ஒழுங்கு- சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

    • தாழ்வு நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் மின்கம்பங்கள் குறைந்தது 15 அடிக்கு மேல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
    • மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திட வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி பேசும்போது தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தாழ்வு நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் மின்கம்பங்கள் அனைத்தையும் குறைந்தது 15 அடிக்கு மேல் இருப்பதை மின்வாரியத்துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

    ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைப்பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள அயல் தாவரங்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    சமீபத்தில் நடைபெற்ற 4 யானைகள் இறப்பு விபத்து போன்ற விபத்துகள் எதிர்வரும் காலங்களில் ஏற்படாமல் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் வெடி விபத்துகள், பட்டாசு கிடங்கு விபத்துகள், கல்குவாரி விபத்துகள் போன்றவை நடைபெறாத வண்ணம் உரிமம் வழங்குதல், உரிமம் மறுபதிவு செய்தல், ஆய்வு நடவடிக்கைகள், போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, கனிமவளத்துறை அலுவலர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொண்டு விபத்து ஏற்படாமல் இருப்பதற்கும், உரிய பாதுகாப்பான சூழ்நிலை இருப்பதற்குமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    கோடை காலங்களில் நகராட்சி, பேரூராட்சி, 251 ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அந்தந்த பகுதிகளில் போதுமான குடிநீர் கிடைப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

    மேலும், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திட வேண்டும். வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடுகளை தகுதியான விவாசயிகளுக்கு கால தாமதமின்றி வழங்குவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் தாராணி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ராஜசேகரன், தருமபுரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சாந்தி, தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×