என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி வாகனங்கள் மிகுந்த கவனத்துடன்,பாதுகாப்பாக இயக்க வேண்டும்-டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
    X

    பள்ளி வாகனங்கள் மிகுந்த கவனத்துடன்,பாதுகாப்பாக இயக்க வேண்டும்-டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

    • வாகனங்களை அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்
    • ஓட்டுநர்களின் கைபேசி எண்கள், மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரி வளாகத்தில், வட்டார போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு பணிகளை கலெக்டர் கே.எம்.சரயு ஆய்வு செய்தார்.

    பின்னர், தனியார் பேருந்து ஓட்டுநர்களிடம் கலெக்டர் பேசியதாவது: கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் 45 தனியார் பள்ளிகளை சேர்ந்த 250 பேருந்துகள், மினி பேருந்துகளில் 'பள்ளி வாகன விதிகள் 2012ன்படி, முதலுதவி பெட்டி, தீயணைப்புக் கருவி, அவசரவழி, ஜி.பி.ஆர்.எஸ் கருவி உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், குழந்தைகள் வாகனங்களில் ஏறும்போது படிக்கட்டுகள், தரைதளம் சரியான அளவில் இருக்கிறதா என்பதையும் அளவீடு செய்யப்பட்டது. வாகனங்களில் இருபுறமும் பள்ளிகளின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி, கைபேசி எண்கள் கட்டாயம் எழுதி இருக்க வேண்டும்.

    பள்ளி வாகனங்களை இயக்கும் போது ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்பாக இயக்க வேண்டும். பள்ளி குழந்தைகளின் வாழ்வில் நேரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

    எனவே, மாணவர்களை குறிப்பிட்ட நேரத்தில் பாதுகாப்பாக பள்ளியில் சேர்க்க வேண்டும். வாகனங்களை அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். அனைத்து பேருந்துகளிலும் சீட் பெல்ட் கட்டாயம் இருக்க வேண்டும். ஓட்டுநர்களின் கைபேசி எண்கள், மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்க வேண்டும்.

    போதிய விதிமுறைகளை கட்டாயம் கடைபிடித்து பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும். மேலும், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரங்களில் செயல்படும் பள்ளி வாகனங்கள் விரைவில் ஆய்வு செய்யப்படும் என்றார். இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு செயல்விளக்க நிகழ்ச்சியும், 108 ஆம்புலன்ஸ சார்பில் முதலுதவி சிகிச்சைகள் மேற்கொள்வது குறித்து செயல்விளக்கம்

    அளிக்கப்பட்டது. இதே போல், பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு கண்பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பாபு, துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, வட்டார போக்குவரத்து அலுவலர் காளிப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அன்புசெழியன், ஆனந்தன், மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளி), முனிமாதன், வட்டாட்சியர் சம்பத், தீயணைப்புத்துறை ஆய்வாளர் மகாலிங்கமூர்த்தி, 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×