என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் படிகட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்
- படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் மாணவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- 2 முறை விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருக்காரம்பட்டி, நாகனம்பட்டி, எலுமல்மந்தை, திகிலோடு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு அரசு நகர பேருந்துகள் இயக்கப்ப டுகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில் இருந்தும், அதிகளவு மாணவ, மாணவியர் நாள்தோறும் அரூர், தருமபுரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி பயில சென்று வருகின்றனர். இந்நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசலால் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் மாணவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போதிய பேருந்து இல்லாததால் நேற்று கொட்டும் மழையிலும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்தது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் 2 முறை விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக கூடுதல் பேருந்து இயக்கவேண்டுமென அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இனிவரும் காலங்களில் உயிர்சேதம் ஏற்படுவதற்குள் கூடுதல் பேருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






