search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் தவிக்கும் பயணிகள்
    X

    புதிய பஸ் நிலையத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள கடைகள்.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் தவிக்கும் பயணிகள்

    சேலம் மாநகரில் 10 லட்சம் பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்தும் 24 மணி நேரமும் சேலம் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்கின்றன.

    சேலம்:

    சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நகரமாக சேலம் மாநகர் விளங்குகிறது. சேலத்தில் அடையாளமாக வெள்ளி கொலுசு, சேலம் உருக்காலை, சேலம் மாம்பழம், ஜவுளி உற்பத்தி, ஏற்காடு, மேட்டூர் அணை ஆகியவை விளங்கி வருகிறது.

    சேலம் மாநகரில் 10 லட்சம் பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். மேலும் கொங்கு மண்டலத்தில் கோவைக்கு அடுத்தபடி யாக சேலம் பெருநகரமாக விளங்குவதால் அண்டை மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்கள் முக்கிய தேவைகளுக்கு சேலத்திற்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதனால் சேலம் மாநகரின் முக்கிய சாலைகள் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும்.

    சேலம் மக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சேலம் புதிய பஸ் நிலையத்திலிருந்து சென்னை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், பாண்டிச்சேரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் திருவனந்தபுரம், கொல்லம், திருப்பதி, மைசூர், பெங்களூர் என அண்டை மாநிலங்களுக்கும் என 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.

    இதே போல வெளியூர்களில் இருந்தும் 24 மணி நேரமும் சேலம் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் சேலம் புதிய பஸ் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடிய, விடிய பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    இப்படி பல்வேறு வகையிலும் சிறப்பு வாய்ந்த சேலம் புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. பஸ் நிலையத்தில் எந்த பகுதியில் பார்த்தாலும் புது, புது கடைகள் தொடங்கப்பட்டு பயணிகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தில் 150 கடைகளுக்கு தான் அனுமதி உண்டு. ஆனால் தற்போது 230-க்கும் அதிகமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதில் குறிப்பாக நாமக்கல், திருச்சி, நாகர்கோவில், ஏற்காடு பஸ்கள் நிற்கும் பிளாட்பார்ம் பகுதியில் அதிக அளவில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த பிளாட்பார்மில் பயணிகள் கால் வைக்க முடியாத அளவுக்கு தரை பழக்கடைகளும் நிரம்பியுள்ளன. இதனால் பயணிகள் நிற்கக்கூட இடம் இல்லாமல் தினம், தினம் தவித்து வருகிறார்கள்.

    முன்பெல்லாம் பயணிகள் அமர இருக்கை வசதிகளும் அந்த பிளாட்பார்மில் போடப்பட்டிருந்தன. தற்போது அந்த இருக்கை வசதிகள் அனைத்தும் மாயமாகிவிட்டன. நிற்பதற்குகூட இடமில்லாமல் கடைகள் விரிக்கப்பட்டு உள்ளதால் மழை வந்தால் ஒதுங்குவது கூட பயணிகளுக்கு சிரமமாகி உள்ளது.

    பஸ் நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் பஸ் நிலையத்தில் கடும் அவதிப்படும் நிலை நிலவுகிறது.

    எனவே பயணிகள் சிரமத்தை போக்க அதிகாரிகள் இதில் உடனடியாக தலையிட்டு கடைகளை முறைப்படுத்தி பயணிகள் வந்து செல்ல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பெரும்பாலான பயணிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்த பயணி சசிக்குமார் கூறியதாவது-

    சேலம் புதிய பஸ்நிலையத்தில் நடைபாதையை அடைத்து ஏராளமான கடைகள் வைக்கப்பட் டுள்ளன. இதனால் பயணிகள் நடைபாதையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக நிரந்தர கடைகள் இடைவெளி இல்லாமல் அதிக அளவில் தொடர்ந்து உள்ளது. ஒரு கரையில் இருந்து மற்ற பகுதிக்கு பஸ் ஏற செல்ல முடிவதில்லை. இது தவிர தரை கடை களும் நடை பாதை முழுவதும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றார்.

    சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த மதன் குமார் கூறியதவாது, சேலம் புதிய பஸ் நிலை யத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. கழிவறைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சுத்தமாக பராமரிப்பது இல்லை, நடைபாதையில் முழுவதும் கடைகள் ஆக்கிரமித்து வைக்கப் பட்டுள்ளன. இதனால் பயணிகள் நடைபாதையில் நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி பயணிகள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×