என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.
சேலம் மாநகராட்சிக்கு பேட்டரி வாகனங்கள் வாங்கியதில் முறைகேடு
- குறிப்பாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- ஈரடுக்கு பேருந்து நிலையம் பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை
சேலம்
சேலம் மாநகராட்சி மன்றத்தின் இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது . துணை மேயர் சாரதாதேவி, இணை ஆணையாளர் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
நாய் தொல்லை:குறிப்பாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆங்காங்கே தெருநாய்கள் பசியாலும் பட்டினியாலும் இறந்து கிடப்பதும், அதன் காரணமாக சாலையில் செல்லும் மனிதர்களை கடிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்தாலும் பிராணிகள் வதை தடுப்புச் குழுவினர் மாநகராட்சி பகுதிகளில் நேரடியாக பார்வையிட்டு தெருநாய்களை பிடித்து தனியாக ஒரு இல்லம் அமைத்து பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.தொடர்ந்து சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் போதிய மின்விளக்கு இல்லாததால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிஉள்ளனர். எனவே மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் மாநகராட்சியில் தற்போது 100 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் முதல் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே வரி விதிப்பு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் பழைய கட்டிடங்களுக்கான வரியையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் சேலம் மாநகராட்சியில் கடந்த காலங்களில் வாங்கிய பேட்டரி வாகனங்கள் செயலிழந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதனை முறையாக பராமரிக்க வேண்டும் அல்லது எடைக்காவது போட வேண்டும் வீணாக குப்பையில் மக்குவதாக தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ராமச்சந்திரன்,பேட்டரி வாகனத்தை புதுப்பிப்பது குறித்தும் அது வாங்கியது குறித்து ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த ஒரு நபர் ஆணையத்தின் முடிவு அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தொடர்ந்து அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம், 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் போன்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி தற்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருவதை பெருமையாக சொல்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை முடக்கப்பட்டு 1000 ரூபாய் தருவதை பெருமை கொள்வதாக தெரிவித்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் கடும் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் யாதவமூர்த்தி கூறியதாவது, தாலிக்கு தங்கம், மடிக்கணினி உட்பட பல்வேறு சாதனை திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டன. ஆனால் அதை தி.மு.க. ஆட்சியில் நிறுத்தி விட்டு ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்குவதை பெருமையாக கூறி வருகிறார்கள். மேலும் சேலம் மாநகரில் துப்புரவு பணிக்கு டெண்டர் விட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளது. இதனால் மக்கள் பணம் வீணாகிறது இதனை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






