என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பிலைக்குட்டை ஓம்சக்தி சித்தர் பீடத்தில் வளர்ந்துள்ள ருத்ராட்ச மரத்தை வழிபடும் பக்தர்கள்.
ஓம்சக்தி சித்தர் கோவிலில் காய்த்துக் குலுங்கும் ருத்ராட்ச மரம்
- 45 அடி உயரத்தில் திருமுருகனும், அறுபடை முருகன் சுவாமி
- 28 அடி உயர பஞ்சமுக அஷ்ட காலபைரவரும்
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த 10 வது கி.மீ. துாரத்தில், நாமக்கல் மாவட்ட எல்லையில் திம்மநாயக்கன்பட்டி வேப்பிலைக்குட்டை கிராமத்தில், 5 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ ஓம்சக்தி முருகன் சித்தர் பீடம் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பிரத்தியங்கரா, காளி, வராகி ஆகிய முப்பெரும் தேவியர் வடிவில் 45 அடி உயரத்தில் எட்டுக்கை அம்மனும், மூலவராக ஆதிபராசக்தி அம்மனும், 45 அடி உயரத்தில் திருமுருகனும், அறுபடை முருகன் சுவாமிகளும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
28 அடி உயர பஞ்சமுக அஷ்ட காலபைரவரும், வராகமூர்த்தி, திருப்பதி வெங்கடாஜலபதி, உலகலந்த பெருமாள், லட்சுமி நரசிம்மர் ஆகிய சுவாமிகளுக்கு, தெப்பக் குளத்திற்கு நடுவே, 5 கோபுர கோயிலும், கன்னிமூல கணபதி, ஏழு சப்த கன்னிகள், காமதேனு கற்பக விருட்சாம்பிகை, அங்காள பரமேஸ்வரி, ஐயப்பன், குரு, பிரம்மா, விஷ்ணு சுவாமி கோயில்களும் இந்த சித்தர் பீடத்தில் அமைந்துள்ளன.இக்கோவில் பீடாதிபதி ஓம் சக்தி முருகன் சித்தர் சுவாமிகள், இமயமலை பிரதேசங்களில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட, சிவனின் கண் என போற்றப்படும், அருட்தன்மை கொண்ட ருத்ராட்ச மரத்தை இக்கோயில் தல விருட்சமாக வளர்க்க முடிவு செய்தார். 4 ஆண்டுக்கு முன் இமயமலை பகுதியில் இருந்து ஒரு ருத்ராட்ச மரக்கன்றை கொண்டு வந்து, சித்தர் பீடத்தில் பைரவர் கோயில் அருகே நட்டு வளர்த்து வந்தார்.இந்த மரக்கன்று தற்போது மரமாக வளர்ந்து, தற்போது கொத்துக் கொத்தாகக் ருத்ராட்சக் காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. இந்த ருத்ராட்ச மரம் குறித்து தகவலறிந்த பக்தர்கள், இக்கோயிலுக்கு சென்று ருத்ராட்ச மரத்தை வணங்கி வழிபடுவதோடு, ருத்ராட்சக் காய்களை ஆச்சர்யத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.






