என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி: போலி பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது
    X

    கார் வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி: போலி பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது

    • ரோகினி, தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
    • நண்பர்களுக்கு 2 கார் தேவை என்று மேலும் ரூ.10 லட்சத்தை சந்துருவின் வங்கிக்கணக்கில் தினேஷ்குமார் செலுத்தினார்.

    வேலூர்:

    திருவள்ளூர் மாவட்டம் சுங்கவார்சத்திரத்தை சேர்ந்தவர் ரோகினி (வயது32). இவருக்கு கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இந்திரா நகரை சேர்ந்த வியாபாரி தினேஷ்குமார் அறிமுகமானார்.

    அப்போது ரோகினி, தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் போலீசாரால் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்து வருகிறேன்.

    எனவே வாகனங்கள் ஏதாவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம். பிற இடங்களை விட குறைந்த விலையில் வாகனங்கள் தருகிறேன் என்று தினேஷ்குமாரிடம் கூறி உள்ளார்.

    இதனை உண்மை என்று நம்பிய அவர் முதற்கட்டமாக 2 கார்கள் வேண்டும் என ரூ.2 லட்சத்தை ரோகினியிடமும், ரூ.12 லட்சத்தை அவருடைய கணவர் சந்துருவின் வங்கிக்கணக்கிலும் செலுத்தி உள்ளார்.

    சில நாட்களுக்கு பின்னர் நண்பர்களுக்கு 2 கார் தேவை என்று மேலும் ரூ.10 லட்சத்தை சந்துருவின் வங்கிக்கணக்கில் தினேஷ்குமார் செலுத்தினார். சில வாரங்கள் ஆகியும் ரோகினி கூறியபடி கார்களை கொடுக்காமலும், உரிய பதில் தெரிவிக்காமலும் காலம் கடத்தி வந்தார்.

    இதுகுறித்து தினேஷ்குமார் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், ரோகினி சப்-இன்ஸ்பெக்டர் என்று நடித்து வாகனங்கள் வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதும், அதற்கு அவருடைய கணவர் சந்துரு உடந்தையாக இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ரோகினியை கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    அவருடைய கணவர் சென்னை துண்டலம் திரு.வி.க. நகரை சேர்ந்த சந்துருவை (45) போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வேலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சந்துருவை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×