search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம்
    X

    நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம்

    • நாமக்கல் நகராட்சியினை சுற்றி ரிங் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது.
    • இதன் மூலம் ரிங் ரோடு பகுதியில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியுடன் இணைப்பதின் மூலமாக ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மேம்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம் தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ராஜேஷ்குமார் எம்.பி., நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

    நகராட்சிக்கு தற்போது ஜேடர்பாளையத்தில் இருந்து புதிய குடிநீர் திட்டம் ரூ. 256.41 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பழைய நகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய 23 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைப்பு முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடுப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடியில் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

    தற்போது நாமக்கல் நகராட்சியின் சொந்த ஆண்டு வருமானம் ரூ.25.64 கோடியாகும். மேலும், இதர வருமானங்கள் சேர்த்து மொத்தம் ஆண்டு வருமானம் ரூ.45.15 கோடி ஈட்டப்படுகிறது. நாமக்கல் நகராட்சி தற்போதைய பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நிலையில் உள்ளது.

    எனவே, தற்போது உள்ள நகரின் பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும், நாமக்கல் மாவட்டத்தின் தலைநகரத்தில் அமைந்துள்ள, நாமக்கல் நகராட்சியினை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது நாமக்கல் நகராட்சியினை சுற்றி ரிங் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. சுமார் 23 கி.மீ. நீளம் கொண்டுள்ள ரிங் ரோடு முதலைப்பட்டியில் தொடங்கி மரூர்ப்பட்டி, வீசாணம், வேட்டாம்பாடி, ரெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, லத்துவாடி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் ரிங் ரோடு பகுதியில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களை தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியுடன் இணைப்பதின் மூலமாக ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மேம்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் சுதா, நகராட்சி துணைத் தலைவர் பூபதி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×