search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடிமெட்டு அருகே கேப் ரோட்டில் மண்சரிவை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள்
    X

    கேப் ரோட்டில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    போடிமெட்டு அருகே கேப் ரோட்டில் மண்சரிவை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள்

    • மூணாறு மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழையால் கடந்த 7ம் தேதி மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
    • மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாறை, மண் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு-போடிமெட்டு இடையே 42 கி.மீ. தூரம் உள்ள சாலை ரூ.381 கோடி செலவில் இருவழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி முடிவடைந்த நிலையில் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் மூணாறு அருகே உள்ள கேப் ரோட்டில் விதிமுறைகளை மீறி பாறைகள் உடைக்கப்பட்டன. அவ்வாறு 6,28,00 மெட்ரிக் டன் பாறைகள் உடைக்கப்பட்டதாக வருவாய்த்துறையினர் அரசுக்கு தாக்கல் செய்தனர். இதற்காக ரூ.6 கோடியே 28 லட்சத்தி 22 ஆயிரத்தி 480 செலுத்துமாறு ஒப்பந்தகாரருக்கு அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஒப்பந்தகாரர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் 2017ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் கேப் ரோட்டில் 5 முறை மண்சரிவுகள் ஏற்பட்டன. 2019ம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மூணாறு மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழையால் கடந்த 7ம் தேதி மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    எனவே இந்த சாலை மண் சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதியாக கருதி தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு நடத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மூணாறிலிருந்து பள்ளிவாசல், ராஜாகாடு, ராஜகுமாரி, பூப்பாறை வழியாக மாற்றுப்பாதையில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தேனிக்கு வந்து செல்கின்றன. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாறை, மண் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×