search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்கிங்காம் கால்வாய், அடையாரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
    X

    பக்கிங்காம் கால்வாய், அடையாரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

    • அடையார், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டையில் இன்னும் 2560 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன.
    • திரு.வி.க. பாலம் அருகில் உள்ள மல்லிப்பூ நகரில் தான் அதிக மக்கள் வசிக்கிறார்கள் என்றனர்.

    சென்னை:

    சென்னை மத்திய பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அரசு முடிவு செய்து உள்ளது. அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

    பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் எடுத்த முடிவின் படி சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலை முதல் ஆர்.கே.மடம் சாலை வரை 2.9 கி.மீ. நீளமுள்ள பகுதிகள் தூர் வாரப்பட்டு சீரமைக்கப்பட உள்ளன. இந்த பணியில் தமிழக நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, சுற்றுச்சூழல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஆகிய துறைகள் ஈடுபட்டு உள்ளன.

    இதற்காக கரையோரம் உள்ள 1200 கான்கிரீட் வீடுகள் மற்றும் குடிசைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டு மாற்று குடியிருப்பு வழங்கப்பட உள்ளது.

    ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்பு அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தூர்வாரப்படும். மூலிகை செடிகள், பூச்செடிகள் வைத்து அழகுப் படுத்தப்பட உள்ளது.

    ஆக்கிரமிப்பு எடுப்பதற்கு சேப்பாக்கம் லாக் நகர் மக்களிடம் முன்பு நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கூறுகையில் எங்களுக்கு நாங்கள் தற்போது இருக்கும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மாற்று இடம் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    இங்கு நாங்கள் 4 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் இதை சுற்றியே தான் உள்ளது. குழந்தைகள் பள்ளியில் படித்து வருகிறார்கள். எனவே இதில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம். அதற்கு அதிகாரிகள் உத்தரவாதம் தந்துவிட்டு வீடுகளை எடுத்து கொள்ளட்டும் என்றார்.

    மகாலட்சுமி, கஸ்தூரி, சாரதா என்ற பெண்கள் கூறியதாவது:-

    நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் அன்றாடம் பிழைப்பு நடத்தி வாழ்பவர்கள். இந்த பகுதியில் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகிறோம். திடீரென்று எங்கள் வீடுகளை அகற்றி தொலை தூரத்திற்கு போக சொன்னால் எங்கு செல்வது. எனவே இதனருகே வீடு ஒதுக்கி தந்தால் நல்லது என்றனர்.

    அடுத்தகட்டமாக அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியை தொடங்கியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, ஜாபர்கான் பேட்டையில் 3 தெருக்கள் உள்ளன. இதில் 61 குடிசைகள் அடையாளம் காணப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக தாணு நகர் பகுதியில் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுக்கப்பட்டு மாற்று இடங்கள் தேர்வு செய்தபின் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படும்.

    அடையார், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டையில் இன்னும் 2560 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. கணக்கெடுக்கும் பணி பருவமழை தொடங்கும் முன்பு கணக்கெடுக்கப்படும். இதில் திரு.வி.க. பாலம் அருகில் உள்ள மல்லிப்பூ நகரில் தான் அதிக மக்கள் வசிக்கிறார்கள் என்றனர். பொது மக்களின் கோரிக்கைகளுக்கு மேயர் பிரியா பதில் அளிக்கையில் குடியிருப்பு வீட்டின் அருகே மாற்று இடம் ஒதுக்க ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×