என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் 24-வது வார்டில், புதிய ரேஷன் கடை அமைக்கும் பணி தொடர்பாக  மேயர் முன்னிலையில் இருதரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
    X

    ஓசூர் 24-வது வார்டில், புதிய ரேஷன் கடை அமைக்கும் பணி தொடர்பாக மேயர் முன்னிலையில் இருதரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

    • புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டார்.
    • மேயர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஓசூர்,

    ஓசூர் 24- வது வார்டு ராம்நகர் பகுதியில் இயங்கி வந்த ரேஷன் கடை, அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்துராயன் ஜீபி என்ற பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் 2,000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அந்த ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் ரேஷன் பொருட்களை வாங்க ஆட்டோவுக்கு சுமார் 200 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குமுறுகின்றனர். இந்த நிலையில், ஓசூர் 24- வது வார்டு ராம்நகர் பகுதியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மஞ்சம்மா, தனது சொந்த செலவில் அந்த பகுதியில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டார்.

    அதற்கு, அங்குள்ள கோட்டை மாரியம்மன் கோவில் தரப்பை சேர்ந்தவர்கள் புதிய ரேஷன் கடை அமைக்கப்படவுள்ள இடம், தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ராம்நகர் பொதுமக்கள் தங்களுக்கு ரேஷன் கடை கண்டிப்பாக வேண்டும் எனக்கூறி அந்த பகுதியில் கடை கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் சத்யா, அங்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என ஒரு தரப்பினரும், கோவி ல் நிலத்தில் கட்டக்கூடாது என மற்றொரு தரப்பினரும் மேயர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு, இது குறித்து தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் சத்யா உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×