என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது குடித்து விட்டு வந்ததாக கூறி அனுமதி மறுப்பு: தியேட்டரில் ரசிகர்கள்-பணியாளர்கள் மோதல்
- மோதல் சம்பவம் முகநூலில் நேரடியாகவும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.
- இரு தரப்பினரை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள சினிமா தியேட்டரில் பத்துதல சினிமா திரையிடப்பட்டுள்ளது. நேற்று படம் பார்ப்பதற்காக கோவை மாவட்டத்தை சேர்ந்த அழகர்சாமி, அருண்பாண்டி, முத்துக்குமார், விவேக், நாகபாண்டியன் ஆகிய 5 பேரும் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் தியேட்டருக்கு வந்தனர். அப்போது 5 பேரும் மது அருந்தியுள்ளதாக கூறி தியேட்டர் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் எங்களது டிக்கெட் பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதில் அந்த ரசிகர்களுக்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு சென்ற அந்த வாலிபர்களின் நண்பரான பல்லடத்தை சேர்ந்த குமார் என்பவரும் அவர்களுக்கு ஆதரவாக பேசி உள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதை அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்த நாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தியேட்டர் ஊழியர்களிடம் சென்று, அந்த வாலிபர்கள் கூறுவது போல டிக்கெட் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டியது தானே என்று கேட்டுள்ளார்.
இதனால் தியேட்டர் ஊழியர்களின் கோபம் செல்வம் மீது திரும்பியது. இதையடுத்து செல்வத்திற்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தியேட்டர் ஊழியர்களான 2 பவுன்சர்கள் செல்வத்தை இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் பவுன்சர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் தியேட்டர் வளாகத்தில் நடந்த மோதல் சம்பவம் முகநூலில் நேரடியாகவும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தரப்பினரை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னையில் உள்ள தியேட்டரில் நரிக்குறவர் சமூக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருப்பூரில் தியேட்டருக்கு வந்த ரசிகர்களை தியேட்டர் பணியாளர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






