search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயத்த ஆடை ஏற்றுமதி எழுச்சி பெற வாய்ப்பு - ஏற்றுமதியாளர்கள்  நம்பிக்கை
    X

    ஆயத்த ஆடை ஏற்றுமதி எழுச்சி பெற வாய்ப்பு - ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை

    • ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி நிலையில் பயணத்தை துவங்கியது.
    • வெளிநாடுகளிலிருந்து ஆடை தயாரிப்புக்கான வர்த்தக விசாரணைகளும் வரத்துவங்கியுள்ளன.

    திருப்பூர் :

    நடப்பு நிதியாண்டின் 10 மாதங்களில், ரூபாய் மதிப்பில் 12.9 சதவீதமும், டாலரில் 4.81 சதவீதமும், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி அடைந்துள்ளது.நடப்பு 2022 - 23ம் நிதியாண்டு துவக்கத்தில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி நிலையில் பயணத்தை துவங்கியது.

    ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது முந்தைய 2021 - 22ம் நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தைவிட நடப்பு நிதியாண்டு ஏப்ரல் மாதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி 24.20 சதவீதம், மே மாதம் 34.92 சதவீதம், ஜூன் மாதம் 59.02 சதவீதம் அதிகரித்தது.அமெரிக்கா, ஐரோப்பா உள்பட உலகளாவிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, உள்நாட்டில் கட்டுக்கடங்காமல் உயர்ந்த பஞ்சு, நூல் விலைகள், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இதன் எதிரொலியாக நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதம் 6.17 சதவீதம்,ஆகஸ்ட் மாதம் 6.87 சதவீத வளர்ச்சியையே எட்டமுடிந்தது.

    செப்டம்பர் மாதம் 10.63 சதவீதமும், அக்டோபர் மாதம் 13.35 சதவீதமும் ஏற்றுமதி சரிவை சந்தித்தது. நவம்பர் மாதம் முதல் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் படிப்படியாக மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளது.நவம்பர் மாத ஏற்றுமதி வர்த்தகம் 22.71 சதவீதம், டிசம்பர் மாத ஏற்றுமதியில், 10.51 சதவீதம் வளர்ச்சி நிலை எட்டப்பட்டுள்ளது.

    மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், கடந்த ஜனவரி மாதத்துக்கான ஏற்றுமதி வர்த்தக விவரங்களை வெளியிட்டது. முந்தைய நிதியாண்டின் ஜனவரி மாதம் 11,511 கோடி ரூபாய் மதிப்பில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றிருந்தது. இந்த வர்த்தகம் நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதம் 12,227 கோடி ரூபாயாக 6.22 சதவீதம் உயர்ந்துள்ளது.

    ஜனவரி மாத மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் உயர்ந்தாலும்கூட டாலர் மதிப்பில் 3.45 சதவீதம் சரிவையே சந்தித்துள்ளது. முந்தைய ஜனவரியில் 1.546 பில்லியன் டாலருக்கு நடந்த ஏற்றுமதி நடப்பு நிதியாண்டு ஜனவரியில் 1.493 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

    நடப்பு நிதியாண்டின் 10 மாதங்களில் ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது 1 லட்சத்து 6,408 கோடி ரூபாய், டாலரில் கணக்கிடும்போது 13.333 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.10 மாத ஏற்றுமதியை பொறுத்தவரை, ரூபாய் மதிப்பில் 12.9 சதவீதமும், டாலரில் 4.81 சதவீதமும் ஏற்றுமதியில் வளர்ச்சி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிதியாண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன.பிரதான ஜவுளி மூலப்பொருட்களான பஞ்சு, நூல் விலைகள் சாதகமாக உள்ளன. வெளிநாடுகளிலிருந்து ஆடை தயாரிப்புக்கான வர்த்தக விசாரணைகளும் வரத்துவங்கியுள்ளன.

    எனவே வரும் மாதங்களில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சிபெறும் என்கிற நம்பிக்கை ஏற்றுமதியாளர் மத்தியில் எழுந்துள்ளது.

    Next Story
    ×