என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடைகளில் வழங்கும் புழுங்கல் அரிசியை சோதனைக்கு உட்படுத்த வேண்டும்
- தருமபுரியில் ரேஷன் கடைகளில் வழங்கும் புழுங்கல் அரிசியை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
தருமபுரியில் உள்ள நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த அரிசி பயன்படுத்தும் பொழுது குடும்ப பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். காரணம் புழுங்கல் அரிசி தண்ணீரில் கொட்டி ஊற வைக்கும் பொழுது சிறிது நேரத்தில் பிசுபிசுப்பு தன்மை அதிகமாக இருக்கின்றது.
அரை மணி நேரத்திற்கு மேல் அரிசியை உப்பு கலந்து ஊற வைத்து பிறகு கழுவ வேண்டும். இப்படி கழிவினால் மட்டுமே பிசுபிசுப்பு தன்மை நீக்கப்படுகிறது . இல்லையென்றால் அந்த அரிசி பயன்படுத்த முடிவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியே பயன்படுத்தினால் பல்வேறு உபாதைகள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டல்களிலும் தெருக்களில் உள்ள உணவகங்களிலும் ஆய்வு நடத்துகிறார்கள். தரம் இல்லாத உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் நியாய விலை கடைகளில் விற்கப்படுகின்ற உணவு பண்டங்கள், அரிசி, பருப்பு, வகைகளையும் எண்ணெய் வகைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.






