என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
நம்ம ஊரு சூப்பரு பணிகள் மந்தமாக நடக்கிறது
- கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை
- அனைத்து நர்சரி மையங்களிலும் செடிகள் வளர்க்க நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
அவர் பேசியதாவது:-
நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் பணிகள் மிகவும் மந்த நிலையில் இருந்து வருகிறது. அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஊராட்சி மன்றத் தலைவர்களும் இணைந்து பணிகளை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூன் 15 வரை இப்பணிகள் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்திடவும், மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு குப்பைகளை தரம் பிரித்து வழங்கிடவும், கிராமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்தும் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை செய்ய வேண்டும்.
புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வகுப்பறை கட்டிடப் பணிகள், சமையலறை புனரமைக்கும் மற்றும் புதிதாக அமைக்கும் பணிகள் கால இடைவெளி தேவைப்படுவதால் வருகிற ஜூன் 30-ந் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இப்பணிகள் நல்ல முறையில் மேற்கொள்ளவும், விரைவாகவும் தரமாகவும் கட்ட உத்தரவிட்டார்கள்,
நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சமத்துவபுரம் வீடு கட்டும் பணிகள் ஜூன் 30-க்குள் முடித்திருக்க வேண்டும். இவைகளில் தொய்வு இருக்கக் கூடாது.
மே மாதத்திற்குள் அனைத்து நர்சரி மையங்களிலும் செடிகள் வளர்க்க நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும். 5 அடி வரை செடிகள் கட்டாயம் வளர்ந்து இருக்க வேண்டும்.
ஜூன், ஜூலையில் இச்செடிகளை நடவு செய்திட இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது. ஆகவே இவற்றை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மிஷின் அந்தியோதயா திட்டம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் 15-வது நிதி திட்டத்தில் தேவைப்படும் பணிகள் குறித்த திட்ட அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்த மாத ஆய்வுக்கு முன் நிலுவையில் உள்ள பணிகள் கட்டாயம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, செயற்பொறியாளர் முத்துசாமி,உதவி இயக்குனர் ஊராட்சிகள் திருகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்,






