என் மலர்
உள்ளூர் செய்திகள்

2-வது நாளாக பொதுமக்கள் முத்தாலம்மன் கோவிலில் உள்ளிருப்பு போராட்டம்
- போலீசார் பேச்சுவார்த்தை
- அமைதி கமிட்டி கூட்டம் அமைப்பதாக உறுதி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சனகிரி மலையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் கோயில் உள்ளது.
இந்த கோவிலில் லாலாப்பேட்டையை சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவர் காஞ்சனகிரி மலைக்கோயில் எங்கள் பஞ்சாயத்திற்கு உட்பட்டது எனவும் இனி நாங்கள் தான் நிர்வாக செய்வோம் என தெரிவித்தாக லாலாப்பேட்டை பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனை கண்டித்து நேற்று லாலாப்பேட்டை ஊராட்சி பொது மக்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவரை கண்டித்து ஆர்பாட்டம் மற்றும் கடையடைப்பு செய்தனர்.
இதனையடுத்து காஞ்சனகிரி மலையடிவாரத்தில் லாலாப்பேட்டை பொதுமக்கள் ஒன்றுகூடி இன்று கலெக்டரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்து பின்னர் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக லாலாப்பேட்டை கிராம பொதுமக்கள் லாலாப்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வினோத்குமார், தாசில்தார் நடராஜன், டி.எஸ்.பிக்கள் பிரபு, ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ஆகியோர் லாலாப்பேட்டை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்துனர்.
இதனை அனைத்தும் கேட்ட கோட்டாட்சியர் வினோத் குமார் பேசியதாவது:-நீங்கள் அனைவரும் தெரிவித்த குற்றச்சாடுகளுக்கு அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் பீஸ் கமிட்டி கூட்டம் அமைத்து இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
மேலும் லாலாப்பேட்டை ஊராட்சியை மறுவரையறை செய்ய பொதுமக்கள் நீங்கள் மனுக்களாக கொடுங்கள் அது அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






