search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையை சிறந்த தொழில் நகரமாக மாற்றிட தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும்
    X

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முதலீட்டு கழகம் சார்பில் நடந்த சிறப்பு முகாமில் தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.

    ராணிப்பேட்டையை சிறந்த தொழில் நகரமாக மாற்றிட தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும்

    • அதிகாரி பேச்சு
    • தொழில் நிறுவன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் புதிய தொழில் தொடங்குவது மற்றும் மேம்படுத்துவது குறித்த சிறப்பு தொழில் முகாம் நடைபெற்றது.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா முகாமை தொடங்கி வைத்து, தொழில் நிறுவனத்தினர் புதிய தொழில் தொடங்கிட கடன் உதவி கூறி வழங்கிய விண்ணப்பங்களை பெற்றார்.

    அப்போது அவர் பேசியதாவது :-தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடந்த நிதி ஆண்டில் ரூ.2050 கோடி வருவாய் கிடைக்க பெற்றது. நடப்பாண்டில் ரூ.3 ஆயிரம் கோடி எனக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தொழில் முதலீட்டாளர்களுக்கு கடன் உதவி வழங்குவதில் இந்திய அளவில் சிறந்த நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் விளங்கி வருகிறது.இந்நிறுவனம் இரண்டு இலக்குகளை நோக்கி தற்போது செயலாற்றி வருகிறது. முதலாவது இந்திய பொருளாதாரத்தில் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலை அடைய புதிய தொழில் நிறுவனங்களை தொழில் தொடங்கிட ஊக்குவிப்பது ஆகும்.

    இரண்டாவது தமிழக முதலமைச்சரின் சிறிய முயற்சியில் தமிழகம் தொழில்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிட 2030-ம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் அளவுக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்தில் உருவாக்கும் வகையில் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது ஆகும்.கடன் உதவிகள் வழங்குவது மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்கள் நீடித்த நிலையான தொழில் வளர்ச்சியை அடைந்து நிலையாக தொழில்களை தொடர்ந்து செய்திட உறுதுணையாக இருக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அனைத்து உதவிகளையும் இணைந்து வழங்கி வருகிறது.

    தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்னேற்றம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனை அவர்கள் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி பொருட்களை வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளை கழகம் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தேவையான உதவிகளை வழங்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகிறது.

    இதன் கீழ் பல ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 2 மாநிலங்களில் ராணுவ தளவாட உபகரணங்கள் தயாரிக்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதில் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகம் தேர்வாகியுள்ளது.

    தமிழகத்தில் சென்னை, சேலம், ஓசூர், திருச்சி மற்றும் கோவை மண்டலங்களில் இந்த உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்கின்ற மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று தமிழகம் கனரக வாகன உற்பத்தியில் இந்தியாவிலேயே முன்னிலையில் இருந்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் இத்தொழிலில் உற்பத்தியை செய்து வருகின்றன.

    தமிழகம் மிகப் பெரிய அளவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக உள்ளது. பல்வேறு வாய்ப்புகளை தமிழக அரசு திறந்து வைத்துள்ளது.ஆகவே இந்த வாய்ப்புகளை தொழில் தொடங்குவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் முக்கிய நோக்கம் தொழில் தொடங்குபவர்கள் தொழிலில் வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து, தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தொழில் நிறுவனங்கள் பங்காற்ற செய்வதே முக்கிய நோக்கம் ஆகும்.

    ஆகவே நிறுவனங்கள் தொழில் தொடங்கிட கடன் உதவிகள் குறித்தும், உங்களுக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும், உதவிகளையும் முகாமில் வருகை தந்துள்ள அலுவலரிடம் கேட்டு கடன் உதவிகளை பெற்று தொழில் தொடங்கிட முன் வாருங்கள்.

    ராணிப்பேட்டை மாவட்டம் மேலும் சிறந்த தொழில் நகரமாக மாற்றிட தொழில் முனைவோர்கள், சிறு, குறு‌ மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்வந்து தொழில் தொடங்கிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த முகாமில் மண்டல மேலாளர் ரமேஷ், மாவட்டத் தொழில் மையம் மேலாளர் ஆனந்தன், பாரத மிகுமின் நிறுவன பொது மேலாளர் (பொறுப்பு) ராஜீவ் சிங், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வேலூர் கிளை மேலாளர் கௌரி மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×