என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலாற்றில் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள்
- போலீசார் பேச்சுவார்த்தை
- போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த வளவனூர் பகுதியில் பாலாற்று படுகையில் மணல் அள்ள அரசு டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாலாற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையிலான பொதுமக்கள் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி, பொக் லைன் எந்திரத்தை சிறை பிடித்து முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இப்பகுதியில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் மணல் அள்ளக்கூடாது. மீறி மணல் எடுத்தால் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மணல் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொக் லைன் எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த திடீர் முற்றுகை போராட்டத்தினால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.






