என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலாஜா டோல்கேட்டில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.காந்தி ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ மற்றும் பலர் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.13.87 கோடி நிதி ஒதுக்கீடு
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.இதில் வாலாஜா டோல்கேட் அருகே நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராணிப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் போன்ற மருத்துவமனைகளில் கட்டமைப்பு மேம்படுத்துவதற்கு ரூ.13 கோடியே 87 லட்சத்திற்கான திட்டங்கள் செயல்படுத்த தொடங்கி இருக்கிறோம்.ரூ.5 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில் விபத்து பதிவுக்கான தரவுகளை பதிவேற்றல் செய்ய புதிய மென்பொருள் ட்ரோமா ரிஜிஸ்டர் சாப்ட்வேர் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பாணாவரம், கொடைக்கல், புதுப்பாடி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார அளவிலான பொது சுகாதாரம் சேவைகளை வலுப்படுத்தும் விதமாக புதிதாக பிளாக் லெவல் பப்ளிக் ஹெல்த் யூனிட்ஸ் கட்டடங்கள் கட்ட வலிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.ஊரகப் பகுதிகளில் வாடகை கட்டடங்களில் செயல்படும் இரண்டு துணை சுகாதார நிலையங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் ரூ.64 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. ரூ.82 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் பாராஞ்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது. ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அருகிலபாடி ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியருக்கான குடியிருப்பு ஒன்று கட்டப்படவுள்ளது.
ரூ.69 ஆயிரம் மதிப்பீட்டில் ராணிப்பேட்டை சுகாதார துறையில் திட்ட பணிகளில் பணியாற்றும் மூன்று மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நல அலுவலராக பணி தரம் உயர்த்தப்படவுள்ளது. ரூ.1கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஆற்காடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதியகட்டிடம் கட்டப்பட உள்ளது.
ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அரக்கோணம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், உள்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்த மாவட்டத்திற்கு கூடுதலாக ரூ.7கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் ராணிப்பேட்டை மாவட்ட உள்ள அரசு மருத்துவமனைகளில் மக்களை தேடி மருத்துவம் தேடும் திட்டத்தில் அனைவருக்கும் நல் வாழ்வு இலக்கை அடைவதற்கு ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் வழங்கப்படும்.
ரூ.67 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மக்களை தேடி மருத்துவம் சேவைளை மேம்படுத்த அனைவருக்கும் நல வாழ்வு என்கிற இலக்கினை மேம்பட ஊரகப் பகுதிகளில் 48 சுகாதார நிலையங்கள் நல வாழ்வு மையங்களாக தரம் உயர்த்தப்படும். ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் புகையிலை கட்டுப்பாட்டு மையம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் புகார் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக பெற்று நடவடிக்கைகள் எடுக்க மருத்துவமனையில் வரவேற்பு பிரிவில் ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட இருக்கிறார். இந்தப் பணிகள் அனைத்தும் ராணிப்பேட்டை தொகுதி அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வலியுறுத்தியதின் பேரில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் திட்ட மதிப்பீடுகளாக தயாரிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து கொண்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, பொது சுகாதார இயக்குனர் வேதநாயகம், கோட்டாட்சியர் பூங்கொடி, நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் லட்சுமணன், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் மணிமாறன், தாசில்தார் ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் தில்லை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகரமன்ற துணை தலைவர் கமலராகவன் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






