என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது
- பிள்ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
- கலெக்டர் வளர்மதி அறிவுரை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த குடிமல்லூர் ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது -
பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் காலங்களில் நீங்கள் தெரிவித்த தேவைகள், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தாய்மார்கள், குழந்தைகளிடையே ரத்தசோகை பிரச்சனை இல்லாமல் இருக்க நாம் அனைவரும் ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம்மை சுற்றியுள்ள இயற்கை உணவுப் பொருட்களையே சரியான முறையில் எடுத்துக்கொண்டு ராணிப்பேட்டையை ரத்தசோகை இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நம் குழந்தைகளை நல்ல பண்போடும், பெரியவர்களிடத்தில் நல்ல மரியாதையுடன் நடந்து கொள்வதை சொல்லி வளர்க்க வேண்டும். ஒழுக்கம் தான் மிகவும் முக்கியம். படித்தால் அனைத்தும் தெரியும் என்று எண்ணி விடக் கூடாது. பிள்ளைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்திட வேண்டும். யாரேனும் பள்ளிக்கு செல்லாமல் இருந்தால் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு தகவல் தெரிவித்திடுங்கள். பிள்ளைகளை தொடர்ந்து படிக்க வைத்திடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம் உள்படபலர் கலந்து கொண்டனர்.






