search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    70 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாத கிராமம்
    X

    70 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாத கிராமம்

    • 70 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாத கிராமத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்ைல.
    • 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது.

    அபிராமம்

    நாடு சுதந்திரம் அடைந்தபின் முதன் முதலாக 1952-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த முதுகுளத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் அபிராமம் அருகே உள்ள பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது சொந்த ஊரான பாப்பனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளாக சரியான சாலை வசதி செய்து தரவில்லை என அந்தப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    1952-ம் ஆண்டு பாப்பனம் கிராமம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது. அப்போது சாலை வசதி செய்ய புறம்போக்கு நிலம் ஊர்ஜிதம் செய்து 1958ம் ஆண்டு செட்டில்மெண்ட் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் சாலைகள் அமைக்க தடை ஏற்பட்டது.

    தற்போது தொகுதி மறுசீரமைப்பில் பாப்பனம் பகுதி பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குள் வந்துள்ளது. ஆனாலும் தற்போது வரை பாப்பனம் கிராமத்தில் சாலை வசதி செய்து தரப்படவில்லை. 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது அரசு அதனை சீரமைத்து தரவில்லை. மக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து அந்த கிராம மக்களே பழுதாகி காணப்பட்ட சாலையை செப்பனிட்டு சரி செய்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாப்பனம் கிராமத்தில் சாலை வசதிகள் முழுமையாக செய்துதரவில்லை. இதனால் மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தற்போது பாப்பனம் ஊராட்சியில் 450 மீட்டர் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மீதமுள்ள 1550 மீட்டர் நீளமுள்ள சாலையில் தார்சாலை அமைக்க அபிராமம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை அமைத்துக்கொள்ள அபிராமம் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இதன்மூலம் பாப்பனம் முதல் அபிராமம் வரை உள்ள சாலையை போர்க்கால நடவடிக்கை எடுத்து தார்சாலையாக மாற்றுவதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய கூலிகள், பிற தொழில்கள் செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசுப்பணிக்கு செல்பவர்கள் அனைவரும் பயனடைவார்கள்.

    Next Story
    ×