என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிட் காயின் மோசடி புகாரில் கிருஷ்ணகிரி, தருமபுரியில் சோதனை: ரூ.1 கோடி சொத்து ஆவணங்கள்-சொகுசு கார்கள் பறிமுதல்
- சோதனைக்கு பிறகு ஓசூர் அலுவலகத்தை போலீசார் சீல் வைத்தனர்.
- ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், 16 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 46). முன்னாள் ராணுவ வீரர். கடந்த 9-ந் தேதி இவருடைய தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனுவை கொடுத்தனர்.
அதில் யுனிவர் காயின் என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனத்தை நடத்திய ஓசூர் ராமகிருஷ்ணா நகர் அருண்குமார், கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்த நந்தகுமார், மத்தூர் அருகே கிட்டனூர் சங்கர், பிரகாஷ், பர்கூர் செட்டிப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன், தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்த வேலன் ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் என்னை சந்தித்து பேசி னர். டிஜிட்டல் காயின் வாங்கி னால் குறைந்த நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் என அவர்கள் கூறினார்கள்.
மேலும் அவர்கள் நடத்தி வந்த டிஜிட்டல் காயின் நிறுவனத்தில் என்னை ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் தொகை முதலீடு செய்ய வைத்தனர்.
அதில் எனக்கு சிறிதளவு வருமானம் வந்தது. இதை தொடர்ந்து எனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் 60 பேரை அதில் முதலீடு செய்ய வைத்தேன். அவர்களுக்கும் சிறிதளவு லாபம் கிடைத்தது. இதைத்தொடர்ந்து யுனிவர் காயின் என்ற பெயரில் இணையதள பக்கத்தை ஏற்படுத்தி எங்களுக்கு லாபம் இருக்கும் தகவலை விளம்பரப்படுத்தினர். அதை நம்பி ஏராளமானவர்கள் அதில் பணத்தை முதலீடு செய்தனர்.
முதலில் 2 வார காலம் பணம் கொடுத்து விட்டு பின்னர் அந்த இணையதள பக்கத்தை முடக்கி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 50-க்கும் மேற்பட்டவர்கள் மோசடி புகாாில் உள்ளவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதன்படி ஓசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில் அருண்குமார் அலுவலகம், கிருஷ்ணகிரி நந்தகுமார், மத்தூர் சங்கர், பிரகாஷ், பர்கூர் சீனிவாசன், தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வேலன் வீடுகள் உள்பட 8 இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு ஓசூர் அலுவலகத்தை போலீசார் சீல் வைத்தனர்.
சோதனையில் பிரகாஷ் என்பவரது வீட்டில் 12 பவுன் நகையும், சீனிவாசன் என்பவரது வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு கார், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஒரு கார், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.1.25 லட்சம் ரொக்கம், என ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், 16 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பிரகாஷ், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






