search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்லமுடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது
    X

    புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்லமுடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது

    • நடவடிக்கை எடுக்க தி.மு.க. கவுன்சிலர் வலியுறுத்தல்
    • புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன், மற்றும் அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் தலைவர் திலகவதி செந்தில் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 42 வார்டுகளிலும் தெரு விளக்குகள் அனைத்தும் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிதண்ணீர் கிடைக்கவும், முக்கியமாக அடிப்படை வசதிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும் கலைஞர் கருணாநிதி மகளிர் கலைக்கல்லூரி எதிரே அமைக்கப்பட்டு வரும் பூங்காவிற்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பெயரை பூங்காவிற்கு வைக்க அனைத்து உறுப்பினர்கள் ஆதரவோடு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் குடிநீர் மானியமாக ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    எஸ்.ஏ.எஸ்.சேட் (அ.தி.மு.க.) பேசுகையில், தனது வார்டான 16-ல் பல்லவன் குளம் அருகே சுகாதார வளாகம் அமைக்க தீர்மானம் கொண்டு வந்ததற்கு நன்றி. எனது வார்டு பகுதியில் 20 சந்துகள் உள்ளன. அவற்றில் குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டு அ.தி.மு.க. என்பதால் புறக்கணிக்கப்படுகிறதா? தற்போது கூட குடிதண்ணீர் வரவில்லை. வராத தண்ணீருக்கு வரி கேட்க முடியாது. நகரை சுற்றி உள்ள 25 வார்டுகளில் அதிகமாக குடிநீர் இணைப்பு உள்ளது. அதனால் நகர்புறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து குடிதண்ணீர் பிரச்சினையை போக்குங்கள் என்றார்.

    பர்வேஸ் (விஜய் மக்கள் இயக்கம்) பேசுகையில், வார்டுகளில் உறுப்பினராக எதற்காக இருக்கிறோம் நாங்கள். எங்கள் வார்டுகளில் டெண்டர் விடும்போது தெரிவிக்க வேண்டும். மேலும் விஸ்வதாஸ் நகரில் தெருவிளக்குகள் இல்லை. அரிமா லைட் நமக்கு நாமே திட்டத்தில் அறிவிக்கப்பட்டு வெறும் அறிவிப்போடு உள்ளது. நான் வளர்ந்து வரும் நகர்மன்ற உறுப்பினர். நான் அடுத்த நிலைக்கு செல்லவேண்டும் என்றால் மக்களின் பிரச்சினைகளை இந்த 5 வருடத்தில் தீர்க்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முடியும். அதிகாரிகளுக்கு அப்படியில்லை. 60 வயது வரை பணியாற்ற முடியும் என்றார்.

    மதியழகன் (தி.மு.க.) பேசுகையில், எனது வார்டு பகுதியில் 2 இன்ச் பைப் லைன் முழுவதுமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் எப்போது நடைமுறைபடுத்தப்படும் என்பதை தெளிவாக கூறவேண்டும் என்றார்.

    வளர்மதி சாத்தையா (தி.மு.க.) பேசுகையில், எனது வார்டு பகுதியான பாரத் நகரில் சாலை மோசமாக உள்ளது. இங்கு சாலை அமைத்து 18 வருடம் ஆகிறது. ஆனால் அதிகாரிகள் 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சாலை போடப்பட்டது என்கின்றனர். இதில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    மூர்த்தி (தி.மு.க.) பேசுகையில் 2023-24க்கு எனது வார்டுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டதற்கு நன்றி. அதற்கு உடனடியாக பணி ஆணை கொடுக்க வேண்டும். பணிகளை விரைந்து ஒதுக்க வேண்டும் என்றார். மேலும் நகராட்சி பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் (சிறுநீர்) அனைத்து பகுதிகளிலும் வீசுகிறது.

    எனது வார்டு பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் சந்தில் கட்டிட கழிவுகளை கொட்டுவதால் சாக்கடைகள் அடைத்துக் கொள்ளும் நிலை தொடர்ச்சியாக உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. அரசிற்கு கெட்ட பெயர் உருவாக்கும் விதமாக சொத்துவரியை அதிகாரிகள் அதிகளவில் போட்டுள்ளனர். அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது துணைத்தலைவர் குறுக்கிட்டு ஆட்சியை பற்றி பேசவேண்டாம் என தெரிவித்தார்.

    கவிவேந்தன் (தி.மு.க.) பேசுகையில், எனது வார்டு பகுதியில் சாலை அமைக்கும் ஒப்பந்தகாரர் சாலை அமைக்கும் போது தெரிவிப்பது இல்லை. சாலையை இஷ்டத்திற்கு அதிகாரிகள் துணையோடு போடுகின்றனர். சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அராஜக போக்கில் ஈடுபடும் ஒப்பந்தகாரர் அரவிந்த் உரிமம் ரத்து செய்யவேண்டும் என்றார்.

    பழனிவேல் (தி.மு.க.) பேசுகையில், சிங்கமுத்து அய்யனார் கோவிலிலிருந்து சமுத்துவபுரம் செல்லும் சாலை மோசமாக உள்ளது. மேலும் முல்லை நகரில் வீடுகளில் பயன்படுத்தும் கழிவு தண்ணீரை சாலைகளில் திருப்பி விட்டுள்ளனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமத்துவ பூங்கா அமைக்க 11 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 20-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியவில்லை என்றார்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    Next Story
    ×