என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் பயின்று மருத்துவம் படிக்க தேர்வான மாணவ, மாணவிகள்
    X

    அரசு பள்ளியில் பயின்று மருத்துவம் படிக்க தேர்வான மாணவ, மாணவிகள்

    • அரசு பள்ளியில் பயின்று மருத்துவம் படிக்க தேர்வான மாணவ, மாணவிகளை பொதுமக்கள் வாழ்த்தினர்.
    • கறம்பக்குடி, கந்தர்வகோட்டையில்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டமாவிடுதி என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் கருப்பைா-தேவிகா தம்பதியரின் மகள் சுபாஷினி. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி சுபாஷினி தனது தொடக்கபள்ளிக் கல்வியை அருகிலுள்ள செவ்வாய்பட்டியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

    ஆறாம் வகுப்பு முதல் கறம்பக்குடி அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் பயின்ற சுபாஷினி பிளஸ்-2 பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் நீட் தேர்வில் 293 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

    மாணவி சுபாஷினிக்கு, ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததால் அரசு வழங்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர சீட்டு கிடைத்துள்ளது. இதனை அறிந்த இவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் கிராம பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். கிராமத்திற்கு பஸ் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும் தொடக்க கல்விக்கு மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்றும், மேல்நிலை கல்விக்கு ஐந்து கிலோ மீட்டர் சென்றும் படிக்க வேண்டிய சூழ்நிலையில் மாணவி சுபாஷினிக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அடைவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் இதுபற்றி மாணவி கூறும்போது, நான் எனது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய ஒத்துழைப்போடு மருத்துவ படிப்பை படித்து முடித்து ஏழைப் பெண்களின் சுகாதார தரத்தை உயர்த்துவேன் என்றும், அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்ப்பேன் என்றும் கூறினார்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் காளிதாஸ் மற்றும் மாணவி ஷாலினி ஆகியோருக்கு அரசின் 7.5 இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்துள்ளது.

    காளிதாசுக்கு திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஷாலினிக்கு திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரியிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லாக்கோட்டை பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்ததை முன்னிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு, வளர்ச்சி குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும், கிராம பொதுமக்கள் பாராட்டினார்கள். கடந்த ஆண்டும் இந்த பள்ளியில் பயின்ற மூன்று மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×