என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருவேல, தைல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும்
- குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
- வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ரூ.23 கோடி வழங்க உள்ளதாக தகவல்
அறந்தாங்கி ,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறை நிறைகளை கோரிக்கையாக முன்வைத்தனர்.அப்போது தமிழ்நாடு மாநில தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் செல்லத்துரை பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு அறுவடை நேரத்தில் பெய்த தொடர்மழையால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமானது, இதனை அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களை உரிய கணக்கெடுத்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ23 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது, அதற்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,அதே சமயத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.அதனை தொடர்ந்து கல்லணைக்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க துணைச் செயலாளர் தென்றல் கருப்பையா கூறுகையில்,பெருமகளூர் ஏரிக்கு தெற்கு வரத்து வாரியில் முடியனாறு பிரிவில் சருக்கை கட்ட வேண்டும், இதனால் ராயன்வயல், ஆவுடையாணி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏதுவாக இருக்கும் என்றார். தொடர்ந்து ஏரி பாசன சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு சங்க தலைவர் சுப்பையா பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சிக்கு காரணமான தைல மரங்களை அகற்ற வேண்டும் என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வாயிலாக தடை உத்தரவு பெறப்பட்டும் இதுவரை அவ்வகையான மரங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி தைல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும், மேலும் வேலி கருவை மரங்களையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.இதே போன்று விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் விளக்கமளித்தும் ,எதிர்வரும் காலங்களில் நிலைமை சரி செய்யப்படும் என உறுதியளித்தனர்.கூட்டத்தில் வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், வில்லியம்மோசஸ், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






