என் மலர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிகளுக்கு விலையில்லா நோட்டுகள் அனுப்பும் பணி
- பள்ளிகளுக்கு விலையில்லா நோட்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- 10 நோட்டுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை :
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ-மாணவிகள் கையில் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இருக்கும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் ஏற்கனவே வந்தன.
அவை அந்தந்த பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுகள் புதுக்கோட்டை வரப்பெற்றன. இதனை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 57 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு தலா 10 நோட்டுகள் வீதம் வழங்கப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து விலையில்லா புத்தக பை, விலையில்லா யூனிபார்ம், ஜாமின்ட்ரி பாக்ஸ், அட்லஸ் ஆகியவை வர உள்ளது. இவை வந்த பின் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வினியோகிக்கப்படும். இதேபோல 6 முதல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா காலணிகள் வந்தன. இதனை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.