என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் கூறும் போது,
புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் உணவின் தரத்தினை ஆய்வு செய்யும் வகையில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் வரும் 25-ந் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பகுதிகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பால் பொருட்களில் உள்ள கலப்படங்கள் குறித்தும், மசாலாப் பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் அஜினோ மோட்டோ மற்றும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், உப்பில் அயோடின் பரிசோதனை மேற்கொள்ளவும், எண்ணெய் வகைகளில் வேறு எண்ணெய் கலப்படம் குறித்தும், பருப்பு வகைகளில் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும், டீ மற்றும் காப்பியில் இரும்புத் துகள்கள் மற்றும் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்கள்அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்பது குறித்து இவ்வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சம்பத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரெங்கசாமி, கார்த்திக், ஜேம்ஸ், மகேஷ் மற்றும் மதுரை உணவு பகுப்பாய்வக நடமாடும் வாகனப் பணியாளர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.






